புங்குடுதீவில் மாணவி சடலமாக மீட்பு

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம், புங்குடுதீவில் காணாமல் போயிருந்த மாணவி ஒருவர் வியாழனன்று கோரமான முறையில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

புங்குடுதீவில் மாணவி சடலமாக மீட்பு
படக்குறிப்பு,

புங்குடுதீவில் மாணவி சடலமாக மீட்பு

வல்லன் என்றழைக்கப்படுகின்ற புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்த சிவயோகநாதன் வித்யா என்ற 19 வயதுடைய உயர்தர வகுப்பு மாணவியே இவ்வாறு சடலமாக, கைகள் பின்னால் கட்டப்பட்டும், மரக் கட்டையில் கால்கள் பரப்பி கட்டப்பட்டும், இரத்த வெள்ளத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஊர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

புங்குடுதீவு மாகாவித்தியாலய மாணவியாகிய இவர் புதன்கிழமை காலை பாடசாலைக்குப் புறப்பட்டுச் சென்றதாகவும், பாடசாலை முடிந்த பின்னர் அவர் வழக்கம்போல வீடு திரும்பாததைக் கண்ட பெற்றோர், பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களுடன் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, அவர் பாடசாலைக்கு வரவில்லை என தெரிவிக்கப்பட்டதையடுத்து, அயலவர்களின் உதவியோடு அவரைத் தேடியதாகவும் கூறப்படுகின்றது.

இரவு முழுதும் தேடியும் அவரைக் காணாத நிலையில், புதன்கிழமை அதிகாலை ஐந்தரை மணியளவில் நாய்களின் உதவியோடு பற்றைகள் நிறைந்த இடத்தில் பாடசாலை சீருடையில் இந்த மாணவி சடலமாகக் கட்டப்பட்டிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மாணவியின் மூத்த சகோதரனும் மற்றுமொருவருமே முதலில் சடலத்தைக் கண்டுபிடித்துள்ளனர். தனது தங்கையைக் கோரமான நிலையில் சடலமாகக் கண்டதையடுத்து, அந்த சகோதரன் மயக்கமடைந்து புங்குடுதீவு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிற்பகல் வரையில் அவருக்கு நினைவு திரும்பவில்லை என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இச்சம்பவம் பற்றி அறிந்த ஊர்காவற்றுறை காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலத்தை மருத்துவ பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர்.

புங்குடுதீவு மகாவித்தியாலய மாணவியாகிய வித்யா கோரமாகக் கொல்லப்பட்டிருந்ததைக் கண்டித்து, புங்குடுதீவில் உள்ள 9 பாடசாலைகளையும் சேர்ந்த அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வித்துறை அதிகாரிகள், பிரதேச சபை மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் வர்த்தகர்கள், பொதுமக்கள் என பலதரப்பட்டவர்களும் புங்குடுதீவு மகாவித்தியாலய மைதானத்தில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.