இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மஹிந்த போட்டி

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவிப்பு படத்தின் காப்புரிமை AFP
Image caption இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவிப்பு

எதிர் வரும் இலங்கை நாடாளுமன்றத்தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

இன்று புதன்கிழமை ஹம்பாந்தோட்டை, மெதமுலன பகுதியில் அமைந்துள்ள தனது இல்லத்தில் நடைபெற்ற கூட்டமொன்றின் போதே அவர் இதனை அறிவித்தார்.

மீண்டும் அரசியலில் பிரவேசிக்குமாறு பலரை தன்னிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கு அமையவே தான் இந்த தீர்மானத்தை எடுத்ததாக கூறினார் மகிந்த ராஜபக்ஷ.

தான் ஒருபோதும் நாட்டுக்கோ ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கோ துரோகம் விளைவிக்கவில்லை என்று கூறிய முன்னாள் ஜனாதிபதி, பாரிய அச்சறுத்தல்கள் மத்தியில் தன்னை ஆதரித்த முன்னாள் அமைச்சர்கள் உட்பட பொதுமக்களுக்கு தான் நன்றி கூறுவதாகவும் தெரிவித்தார்.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போதிலும் கடந்த ஆறு மாதங்களுக்குள் நாட்டின் தேசிய பாதுகாப்பு பாரிய அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகக் கூறிய அவர் யுத்தத்தின்போது மரணமரணமடைந்த பயங்கரவாதிகளுக்கு நஷ்டஈடு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

கடந்த நூறுநாட்களுக்குள் இலங்கையின் பொருளாதாரம் மிகப்பெரிய பின்னடைவுகளை சந்தித்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

பாரிய ஊழல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய முன்னாள் ஜனாதிபதி ஊழல்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளோரின் வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இலங்கையின் ஜனநாயகம் முடக்கப்பட்டதாகவும், எதிர்க்கருத்துக்கள் தெரிவிக்கும் நபர்கள் கட்சியை விட்டு விலக்கபட்டு மறியலில் தள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.