இலங்கை: முஸ்லிம் மத நிகழ்வுகளில் தேர்தல் பிரச்சாரம் நடப்பதாக கவலைகள்

Image caption ரமலான் பண்டிகை காலத்தில் தங்களால் வழமையாக அளிக்கப்படும் ஸக்காத் கொடை இது என்று முஸ்லிம் அரசியல்வாதிகள் கூறுகின்றனர் ( படத்தில் அமைச்சர் ரிசாத் பதியுதீன்)

இலங்கையில் முஸ்லிம் மத நிகழ்வுகளில் தேர்தல் பிரச்சாரங்கள் இடம்பெறுவதாக உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கஃபே கவலை வெளியிட்டுள்ளது.

தற்போது நடைபெற்றுவரும் ரமலான் நோன்பு கால நிகழ்வுகளை தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்திக்கொள்வதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

மத நிகழ்வுகளில் வேட்பாளர்கள் இலவசப் பொருட்களை வழங்கி தேர்தல் பிரச்சாரங்கனை முன்னெடுப்பது தேர்தல் சட்ட விதிகளை மீறும் செயல் என்று கஃபே அமைப்பின் தேசிய அமைப்பாளரான அஹமட் மனாஸ் மக்கீன் கூறுகின்றார்.

குறித்த சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள், குறிப்பாக வன்னி மாவட்டத்திலுள்ள முசலி மற்றும் சிலாவத்துறை உட்பட முஸ்லிம் பிரதேசங்களில் பதிவாகியுள்ளன.

தேர்தல் காலத்தில் உலர் உணவு பொருட்கள் உள்ளிட்ட இலவசப் பொருட்களை வழங்குவது என்பது தேர்தல் சட்ட விதிகளின் படி இலஞ்சமாக கருதப்படுகின்றது என்றும் அவர் அஹமட் மனாஸ் மக்கீன் தெரிவித்தார்.

இரண்டு பிரதான கட்சிகளைச் சேர்ந்த முஸ்லிம் வேட்பாளர்களும் இவ்வாறான நடவடிக்கைகளில் தொடர்புடையவர்களாக காணப்பட்டாலும் அமைச்சரொருவர் தொடர்ந்தும் ஈடுபடுவது தொடர்பாக தங்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அஹமட் மனாஸ் மக்கீன் கூறினார்.

ஆனால், ரமலான் பண்டிகை காலத்தில் தங்களால் வழமையாக அளிக்கப்படும் ஸக்காத் கொடை இது என்று முஸ்லிம் அரசியல்வாதிகள் கூறுகின்றனர்.

இந்த ஆண்டு, ரமலான் நோன்பு காலத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியானதை அடுத்தே இது சர்ச்சைக்குரிய விடயமாக சிலரால் பார்க்கப்படுவதாக அவர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இதேவேளை நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியான பின்னர் இதுவரையில் ஒரு கொலை உட்பட நாடு முழுவதும் 261 தேர்தல் விதிமுறை மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கஃபே அமைப்பு குிப்பிடுகின்றது.