இலங்கை ஒலிம்பிக் சங்கத்துக்கும் இறகுப் பந்து சங்கத்துக்கும் மோதல்?

இலங்கை இறகுப் பந்துச் சங்கம் உலகச் சம்மேளனத்தால் இடைநீக்கப்படுவதற்கு உள்நாட்டு ஒலிம்பிக் சங்கமே காரணம் என இறகுப் பந்து சங்கம் குற்றஞ்சாட்டுகிறது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption இலங்கை சங்கத்தின் மீதான தடை காரணமாக, அதன் வீரர்கள் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

இதற்கான பொறுப்பை இலங்கை ஒலிம்பிக் சங்கமே ஏற்கவேண்டும் என இறகுப்பந்து சங்கத்தின் தலைவர் சுராஜ தன்தெனிய பிபிசியிடம் தெரிவித்தார்.

தமது சங்கத்தின் விதிமுறைகளில் இருந்த குறைபாடுகளை இலங்கை ஒலிம்பிக் சங்கம் உலக இறகுப்பந்து சம்மேளனத்துக்கு தெரிவித்தது என்றாலும், பேச்சுக்களுக்கு பிறகு தமது விதிமுறைகளில் பல திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன எனவும் அவர் கூறுகிறார்.

ஆனால் இந்தத் திருத்தங்கள் தொடர்பாக விளையாட்டு அமைச்சுக்கு அறிவித்தல்களை வழங்கி, மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறியதன் காரணமாகவே தமது சங்கம் இடைநீக்கப்பட்டது எனவும் சுராஜ தன்தெனிய கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை bbc
Image caption அரசின் கண்காணிப்பு தவறில்லை என்கிறார் சங்கத்தின் தலைவர்

தமது சங்கத்தின் தேர்தல் நியாயமான முறையில் நடத்தப்படுவது அவசியம் எனவும் அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

சங்கத்தின் மீதான தடையை நீக்குவது தொடர்பில், இலங்கை விளையாட்டு அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றாலும், அரசியல் தலையீடுகள் காரணமாகவே உலகச் சம்மேளனம் தடை விதித்தது எனக் கூற முடியாது எனவும் சொல்கிறார்.

இலங்கை இறகுப் பந்து சங்கத்தின் முன்னேறத்துக்காக அரசு நிதியுதவிகளை செய்துவருவதால், அந்த நிதி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை ஆராய்வதற்கு அரசுக்கு அதிகாரம் உள்ளது எனவும் சுராஜ் தன்தெனிய கூறுகிறார்.