மட்டக்களப்பில் துப்பாக்கியால் சுட்டு ஒருவர் பலி

இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள மட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடி பிரதேசத்தில் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர் என கூறப்படும் நபரொருவர் சனிக்கிழமையன்று வீதியில் வைத்து அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

Image caption இந்தக் கொலையின் பின்னணி குறித்து இதுவரை தெரியவில்லையென காவல்துறை தெரிவித்துள்ளது.

ஜமால்தீன் மொஹமட் அமீன் என அடையாளம் காணப்பட்டுள்ள இந்நபர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, வீதியோரம் மறைந்திருந்த துப்பாக்கிதாரியினால் சுடப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்த நபர் தனது தீவிர ஆதரவாளர் எனவும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதில் தொடர்புபட்டிருப்பதாகவும் அந்த பிரதேசத்திலுள்ள ஐ.தே. கட்சி வேட்பாளரான எஸ்.எச். அமீர் அலி குற்றம்சாட்டியிருக்கிறார்.

ஆனால், இந்தச் சம்பவத்தில் தனக்கோ தனது கட்சித் தலைமைக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என அந்த பிரதேசத்திலிருந்து ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் எம்.எம். ரியால் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இந்தக் கொலை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக கூறும் காவல்துறை ஊடகப் பேச்சாளரான ருவன் குணசேகர, இதுவரை கொலைக்கான பின்னணியோ, கொலையாளியோ அடையாளம் காணப்படவில்லை என்று தெரிவித்தார்.