மன்னார் மனிதப் புதைகுழி விவகாரத்தில் புதிய ஆதாரம்

  • 26 ஆகஸ்ட் 2015

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டிருந்த மனிதப் புதைகுழிக்கருகில் கிணறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் இது தொடர்பான விசாரணையில் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது.

Image caption அந்த இடத்தில் கிணறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால், அந்த இடத்தை துப்புரவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த இடத்தில் சுமார் 90 மனித உடல் எச்சங்கள் இந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான இடமாக அது முன்னர் இருந்ததாக இது தொடர்பாக விசாரணை நடத்திவருகின்ற புலனாய்வு தரப்பு நீதிமன்றத்தில் கூறியிருந்தது.

ஆனால், காணாமல் போயுள்ளவர்களின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணிகள் அங்கு அவ்வாறு இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான இடம் இருந்திருக்கவில்லை என்றும், அதற்கான பதிவுகளோ ஆவணங்களோ கிடையாது என்றும் வாதிட்டனர்.

கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிக்கருகில் முன்னர் ஒரு கிணறு இருந்ததாகவும், அந்தக் கிணற்றைக் கண்டுபிடித்து அதனையும் சோதனையிட வேண்டும் என நீதிமன்றத்தில் அவர்கள் கோரியிருந்தனர்.

Image caption கிணறு கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இடத்தை ஒட்டிய வீதியை பயன்படுத்தத் தடைவிதித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து, புதன்கிழமை நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின்போது கிணறு இருந்ததாகத் தெரிவிக்கப்பட்ட இடத்தை மன்னார் மாவட்ட நீதவானின் தலைமையில் காவல்துறையினரும், பாதிக்கப்பட்ட மக்களின் சார்பிலான சட்டத்தரணிகளும் சென்று பார்வையிட்டனர்.

காட்டைப் போல புதர்களும் செடிகளும் அடர்ந்திருந்த அந்த இடத்தில், நில அளவை திணைக்கள தேசப்படத்தின் உதவியோடு பிரதான வீதியில் இருந்து சுமார் 22 மீட்டர் தொலைவுக்கு காடுகளை அழித்து நடைபாதை அமைத்துச் சென்று பார்த்தனர்.

அப்போது அந்த இடத்தில் சம்பந்தப்பட்ட கிணறு இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து அந்தப் பகுதியில் உள்ள தடயங்களைப் பாதுகாப்பதற்காக அந்த வீதியைப் பயன்படுத்துவதை தடுத்து நிறுத்தும்படி காவல் துறையினருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் முன்னர் மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இருந்து கிணறு வரையிலான காடடர்ந்த பிரதேசத்தை துப்பரவு செய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

காடுகள் அழிக்கப்பட்டதன் பின்னர் அந்த இடத்தையும் கிணற்றையும் நேரடியாகப் பார்வையிட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்காக வழக்கை வெள்ளிக்கிழமை வரையில் நீதவான் ஒத்திவைத்துள்ளார்.