நெற்களஞ்சியமாகும் இலங்கை சொகுசு விமான நிலையம்

  • 2 செப்டம்பர் 2015
மத்தல விமான நிலையத்தில் சேமிக்கப்படுவதற்காக கொண்டுவரப்பட்ட முதல் தொகுதி நெல் மூட்டைகள்
Image caption மத்தல விமான நிலையத்தில் சேமிக்கப்படுவதற்காக கொண்டுவரப்பட்ட முதல் தொகுதி நெல் மூட்டைகள்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கட்டிய சர்ச்சைக்குரிய பிரம்மாண்டமான மத்தல சர்வதேச விமான நிலையம் தற்போது புதியதொரு வகையில் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. தற்காலிகமாக நெல்லை சேமித்துவைக்கும் நெற்களஞ்சியமாக பயன்படுத்தப்படுகிறது.

இந்த விமான நிலையத்தில் இருக்கும் சரக்கு கிடங்குகளில் ஒன்றில் நெல்லை சேமித்து வைக்கப்போவதாக இலங்கை அரசு தெரிவித்திருக்கிறது.

Image caption விமான நிலையப் பணியாளர்கள் சிலர் நெல் சேமிக்கப்படுவதை எதிர்த்து தடுக்க முனைந்தனர்

இதன் மூலம் மாதத்திற்கு ஆறாயிரம் டாலர் வருமானம் கிடைக்கும் என்று அரசு கூறுகிறது.

இந்த மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் மகிந்த ராஜபக்ஷவின் சொந்த மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெகு விமரிசையாக துவக்கி வைக்கப்பட்டது.

Image caption எதிர்ப்பாளர்களை அகற்றிய காவல்துறையினர் நெல் மூட்டைகள் சுமந்த வாகனங்கள் விமான நிலையத்துக்குள் செல்ல உதவினர்

ஆனால் வனவிலங்குகள் அதிகம் வசிக்கும் சூழலில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டிருப்பதனால் இங்கு வரும் விமானங்களுக்கும் பறவைகளுக்கும் இடையில் அடிக்கடி மோதல் ஏற்பவதும் அதனால் உருவாகவிருந்த விபத்துக்கள் தவிர்க்கப்படுவதும் மிகப்பெரிய சர்ச்சையைத் தோற்றுவித்தது.

ஃபிளை துபாய் என்கிற ஒரே ஒரு விமான நிறுவனம் மட்டுமே இந்த விமான நிலையத்தைத் தற்போது பயன்படுத்துகிறது.

Image caption விமான சரக்குகளை சேமிப்பதற்காகக் கட்டப்பட்ட கிடங்குகள் நெற்களங்கியங்களாக மாறியுள்ளன

இங்குள்ள சரக்கு கிடங்கில் சேமிப்பதற்காக புதன்கிழமை கொண்டுவரப்பட்ட முதல் தொகுதி நெல் மூட்டைகளை ஏற்றிவந்த வாகனங்களை மறிப்பதற்கு விமான நிலைய ஊழியர்கள் சிலர் முயன்றனர். அனால் அவர்களால் அதை தடுக்க முடியவில்லை.

எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அகற்றிய காவல்துறையினர் நெல்மூட்டைகளை கிடங்கில் கொண்டு சென்று சேமிக்கச் செய்தனர்.

இந்த விமான நிலையம் அங்கே அமைக்கப்பட்டதே தவறு என்கிறார் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை பேராசிரியர் டாக்டர் எம் கணேசமூர்த்தி. இந்த சர்ச்சை குறித்து அவர் பிபிசி தமிழோசைக்கு அளித்த பிரத்யேக செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை