கிழக்கிலங்கையில் தமிழ் பாடசாலை மாணவர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழ் பாடசாலைகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையில் தொடர்ந்து வீழ்ச்சி ஏற்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிழக்கிலங்கையிலுள்ள தமிழ்ப் பாடசாலை ஒன்று
படக்குறிப்பு,

கிழக்கிலங்கையிலுள்ள தமிழ்ப் பாடசாலை ஒன்று

சிங்கள, முஸ்லிம் சமூகங்களைக் காட்டிலும் விகிதாச்சார அடிப்படையில் பாடசாலைகளிலிருந்து விலகும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையே கூடுதலாக உள்ளது என மாகாண கல்வி அமைச்சின் உயரதிகாரி அப்துல் நிசாம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் குறைந்தது 2,000 தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது கணக்கெடுப்புகளின் மூலம் தெரியவந்துள்ளது எனவும் அவர் கூறுகிறார்.

இந்த அளவுக்கு மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து வெளியேறுவது அதிர்ச்சியளிப்பதாக நிசாம் தெரிவித்தார்.

தமிழ் மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து கல்வியை முடிக்காமல் வெளியேறுவது தொடர்ச்சியாக அதிகரித்து வருவது குறித்து ஆராய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

பாடசாலைகளில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், அரசு கிராமப் புறங்களில் கூடுதல் கவனத்தை செலுத்தவுள்ளதாகவும் அப்துல் நிசாம் கூறுகிறார்.