'தமிழ்க் கைதிகளின் விடுதலையை கோரி' யாழ் மாணவன் தற்கொலை

இலங்கையின் வடக்கே, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச் சேரந்த பள்ளி மாணவனே இவ்வாறு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

தனது கோரிக்கையை தனது கைப்பட கடிதம் ஒன்றில் எழுதி வைத்துவிட்டு ரயில் முன் பாய்ந்து இந்த மாணவன் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

'தமிழீழ விடுதலையைக் கொடு, ஒளியூட்டு, ஒரு அரசியல் கைதியேனும் சிறைகளில் இருக்கக் கூடாது, அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகள் அந்தக் கடிதத்தில் உள்ளன.

'அதிமேதகு ஜனாதிபதி மைத்திரி, நல்லாட்சி அரசாங்கம் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் புனர்வாழ்வளித்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இந்த அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டியதன் அவசியம் எனக்குப் புரிந்தும்கூட, இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு இன்னமும் புரியவில்லையே என்பது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது' என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

கோண்டாவில் ரயில் நிலையத்திற்கு அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.