தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதம்

இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் இருவர் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளனர்.

Image caption இலங்கையில் கைதிகள் பிரச்சினை பெரும் பிரச்சினையாகவே இருந்து வருகிறது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சிறைகளில் விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் குறித்து நாடாளுமன்றத்தில் செவ்வாய்கிழமை விவாதம் ஒன்றை முன்னெடுக்கவுள்ள நிலையில், இந்த இருவர் தமது போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

அனுராதபுரம் சிறையிலுள்ள இந்த இருவரும் உண்ணாவிரத்ததை மேற்கொண்டுள்ளதை அவர்களின் உறவினர்களும், அரச அதிகாரிகளும் பிபிசியிடம் உறுதிப்படுத்தினர்.

உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள இந்த இரு கைதிகளும் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் வைத்து கைது செய்யப்பட்டு, 13 மாதங்கள் ஓமந்தையில் செயற்பட்டு வந்த புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்பே பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் இவர்களைப் பொறுப்பேற்று பூஸா தடுப்பு முகாமுக்குக் கொண்டு சென்றதாக அவர்கள் தரப்பில் கூறுகின்றனர்.

அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் தொடர்ந்து நிறைவேற்றப்படாத காரணத்தாலேயே, இவர்கள் மீண்டும் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என தமிழ்க் கைதிகளின் விடுதலைக்கான செயற்பாட்டாளர்களில் ஒருவராகிய அருட்தந்தை சக்திவேல் கூறுகின்றார்.