'மலையகத்தில் ஒரு லட்சம் பேருக்கு கழிப்பறை இல்லை'

  • 10 மார்ச் 2016
Image caption '20 ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வாறான திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்ட போதிலும் நடைமுறைப்படுத்த முடியாமல் போனது' என ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்

இலங்கையில் மலையக பெருந்தோட்ட குடியிருப்பாளர்களில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு கழிப்பறை வசதிகள் இல்லை என்று அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

மலையக பெருந்தோட்ட பகுதியை அபிவிருத்தி செய்வதை நோக்காக கொண்ட ஐந்தாண்டு திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே, மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொண்டிருந்தார்.

'20 ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வாறான திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்ட போதிலும் நடைமுறைப்படுத்த முடியாமல் போனது' என ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் மலையக மக்களுக்கும் ஏனைய மக்களை போன்று உரிமைகள் கிடைத்துள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

மலையக மக்களுக்கு சொந்தக் காணியில் சொந்த வீடு என்ற திட்டத்தின் கீழ் 65000 வீடுகள் அமைத்துக் கொடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தோட்டப்புறங்களில் உள்ள அரச மருத்துவமனைகளை முழுமையாக அபிவிருத்தி செய்தல், மாணவர்களை கல்வியில் ஊக்குவித்தல், குடும்ப நலன் மற்றும் பெண்களின் அரசியல் விழிப்புணர்வு ஆகிய விடயங்களும் இந்தத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

முன்னர் 10-ஆண்டுத் திட்டமாக அமைச்சரவையால் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த இந்தத் திட்டம் புதிய அரசாங்கத்தின் கீழ் 5-ஆண்டுத் திட்டமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் திகாம்பரம் தெரிவித்தார்.

மலையக மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதை நோக்காகக் கொண்டு ஐநா அபிவிருத்தித் திட்டத்தின் தொழில்நுட்ப ஆலோசனையுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு, உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நிறுவனங்களின் உதவி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.