'மத்திய அரசு, மாகாண அரசை புறக்கணிக்கிறது': சி.வி.

  • 17 மார்ச் 2016
Image caption `மத்திய அரசாங்கம், மாகாண அரசாங்கத்தினைப் புறக்கணிக்கிறது'

இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து ஆஸ்திரேலிய அரசாங்கம் வடமாகாணத்தில் முன்னெடுத்துவரும் வேலைத் திட்டங்களில் வடமாகாண சபையின் பங்களிப்பு கூறிக் கொள்ளும் அளவிற்கு இல்லை என இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவரிடம் வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் மக்களுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும்போது அந்த மக்களின் கருத்துக்களை அறிந்து செயற்படுவதே சிறந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

குறித்த வேலைத் திட்டங்களை பார்வையிட யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் பிரைசி ஜோன் ஹட்டக்சன் வட மாகாண ஆளுனர் அரசாங்க அதிபர் ஆகியோரையும் சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்தச் சந்திப்பு குறித்து செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர் `அரசாங்கம் என்ற வகையில் அரசுடன் இணைந்து செயற்படுவதே சிறந்தது என்று ஆஸ்திரேலிய தூதுவர் தெரிவித்ததை நான் எதிர்க்கவில்லை, மக்களின் பிரதிநிதிகளை புறக்கணித்து மத்திய அரசாங்கத்தின் சொற்படி நடப்பது முறையற்றது, இது தொடர்பில் எம்முடனும் கலந்தாலோசிப்பதன் முக்கியத்துவம் பற்றியும் வலியுறுத்தினேன்' என்றார்.

'யுத்தம் முடிந்து 6 ஆண்டுகளின் பின்னரும் இங்கு இராணுவம் இருப்பதை மக்கள் விரும்பவில்லை. இராணுவ பிரசன்னத்தை குறைப்பதுவே முறையானது எனவும் சுட்டிக்காட்டினேன்' என அவர் மேலும் தெரிவித்தார்.

'மத்திய அரசாங்கம், மாகாண அரசாங்கத்தினைப் புறக்கணித்து தனது செயற்பாடுகளை முன்னெடுத்துக்கொண்டு செல்கின்றமை எமக்கு வருத்தத்தினை தருகின்றது' என்றும் அவர் கூறினார்.

'மாகாணசபைக்கான அதிகாரங்களைக் கொடுத்து, அதிகார பகிர்வில் ஈடுபடுவதாக குறிப்பிட்டதன் பின்னர் அதற்கு மாறாக மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்களை பிரயோகிப்பது அதிகார பகிர்வுக்கு எதிரான தன்மையினை வெளிப்படுத்தும்' என்று ஆஸ்திரேலிய தூதுவரிடம் கூறியதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.