ரவிராஜ் கொலை வழக்கு:`கருணா குழு உறுப்பினர்கள் வெளிநாட்டுக்கு தப்பி ஓடியுள்ளனர்'

  • 17 மார்ச் 2016
படத்தின் காப்புரிமை AFP

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு ஒன்றை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு போதிய ஆதாரங்கள் இருப்பதாக கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த வழக்கின் முதல் கட்ட விசாரணைகளின் பின்னர் தீர்ப்பை அறிவித்த நீதிபதி இதனை தெரிவித்தார்.

ரவிராஜ் கொலை வழக்கில் கடற்படை உறுப்பினர்கள் இரண்டு பேர், காவல்துறை அதிகாரி ஒருவர், மற்றும் கருணா குழுவை சேர்ந்த இரண்டு நபர்களுக்கு எதிராக காவல்துறையினர் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தனர்.

சந்தேக நபர்களுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்வதற்கு போதிய ஆதாரங்கள் இருக்கின்றனவா என்பது குறித்து ஆராயும் முதற்கட்ட விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

இது தொடர்பில் தீர்ப்பை அறிவித்த மஜிஸ்ட்ரேட் நீதிபதி, சந்தேக நபர்களுக்கு எதிராக மேல்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கைகளை தாக்கல் செய்வதற்கு போதிய ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்தார். இது தொடர்பில் சட்டமாஅதிபருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கின் சந்தேக நபர்களில் இரண்டு பேர் தற்போது வெளிநாடுக்கு தப்பியோடியுள்ளார்கள் என நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ள காவல்துறையினர், அவர்கள் இருவரும் கருணா குழுவை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டுக்கு தப்பியோடிய இருவரையும் கைது செய்யுமாறு நீதிமன்றம் சர்வதேச காவல்துறையினருக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.