ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'ஒரு கூர் வாளின் நிழலில்': தமிழினியின் கணவர் கருத்து

  • 17 மார்ச் 2016

விடுதலைப்புலிகளின் அரசியல்துறை மகளிர் அணியின் பொறுப்பாளராக இருந்த தமிழினி என்ற சுப்ரமணியம் சிவகாமி, எழுதியதாகக் கூறப்படும்- ஒரு கூர் வாளின் நிழலில் என்ற நூலை வெளியிடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள அவரது கணவர் ஜெயகுமரன் ஈடுபட்டுள்ளார்.

அந்த நூலை வெளியிடுவதற்கு காவல்துறையினர் முன்னர் அனுமதி மறுத்திருந்த நிலையில், அரசின் உயர்மட்ட அதிகாரிகளின் தலையீட்டில் தற்போது அந்த அனுமதி கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஏற்கனவே, இந்திய பதிப்பாக தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டுள்ள இந்த நூல், இலங்கையில் கிளிநொச்சியில் எதிர்வரும் 19-ம் திகதி சனிக்கிழமை வெளியிடப்படவுள்ளதாக தமிழினியின் கணவர் ஜெயக்குமரன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

புனர்வாழ்வு முகாமிலிருந்து 2013-ம் ஆண்டில் விடுவிக்கப்பட்ட தமிழினி, 2014-ம் ஆண்டின் இறுதிக் காலத்தில் இந்த நூலை எழுத முடிவுசெய்ததாகவும் ஜெயக்குமரன் கூறினார்.

பள்ளி மாணவியாக இருந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் பங்கேற்ற விதம், பின்னர் அரசியல்துறை பொறுப்பாளராக ஏற்பட்ட அனுபவங்கள் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கிய ஒரு சுயசரிதையாக இந்த நூல் அமைந்திருந்தாகவும் தமிழினியின் கணவர் தெரிவித்தார்.

தமிழினி இறுதிக் காலங்களில் நோய்வாய்ப்பட்டிருந்த காரணத்தினால் அந்த நூல் வெளியீட்டை பிற்போட வேண்டிய தேவை ஏற்பட்டதாகவும், அவர் இறந்த பின்னர் அவரது விருப்பத்தை நிறைவு செய்வதற்காக இந்த நூலை எழுதுவதாகவும் ஜெயக்குமரன் பிபிசியிடம் கூறினார்.

ஆனால், 'முன்னாள் பயங்கரவாதிகளின் படங்களை அவர்களின் சீருடையுடன் சட்டவிரோதமானது' என்று தன்னிடம் கூறிய கிளிநொச்சி பொலிஸார், அதற்காக தான் கைதுசெய்யப்பட முடியும் என்றும் கூறியதாக ஜெயக்குமரன் தெரிவித்தார்.

பின்னர், தனது நண்பர்களூடாக சில அமைச்சர்களைத் தொடர்புகொண்டு, அவர்களின் உதவியுடன் தங்களின் நூல் வெளியீட்டுக்கு இருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாகவும் தமிழினியின் கணவர் தமிழோசையிடம் கூறினார்.

சில ஆண்டுகள் புனர்வாழ்வு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழினி, பின்னர் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் சுகவீனம் காரணமாக கடந்த ஆண்டு உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.