சிறுநீரக வியாபாரம்: 6 இந்தியர்கள் மீது வழக்கு

  • 16 மே 2016

சட்ட விரோத சிறுநீரக வியாபாரம் சம்பந்தமாக இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள ஆறு இந்திய பிரஜைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாக போலீஸார் கொழும்பு மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திடம் தெரிவித்தனர்.

மேலும், சட்ட விரோதமாக வீசா அனுமதியின்றி இலங்கையில் தங்கியிருந்தது தொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் படி அவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்படுமென்று கூறிய போலீஸார் இது சம்பந்தமாக சட்ட மா அதிபரின் ஆலோசனைகள் பெறவுள்ளதாக தெரிவித்தனர்.

அதே போன்று இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு கொழும்பு, மிரிகானை விசேட முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய பிரஜை ஒருவர் தப்பியோடியது குறித்து விளக்கமளிப்பதற்கு இன்று நீதிமன்றத்தில்ஆஜராகுமாறு குடிவரவு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு கடந்த வழக்கு தினத்தில் நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால், அந்த அதிகாரி இன்று நீதிபதி முன் ஆஜராகவில்லை.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரியை எதிர் வரும் 26 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி மீண்டும் உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், தப்பியோடிய இந்திய பிரஜை இலங்கையை விட்டு வெளியேறியுள்ளாரா என்பதை ஆராய்ந்து அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்களை எதிர்வரும் 26 ஆம் தேதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்த நீதிபதி அன்றைய தினம் அவற்றின் பிணை மனுக்கள் குறித்தும் ஆராயப்படும் என அறிவித்தார்.