இலங்கையில் கடும் மழை, நிலச்சரிவுகளில் இதுரை 11 பேர் பலி

  • 17 மே 2016

இலங்கையில் பெய்துவரும் கடும் மழை மற்றும் நிலச்சரிவுகள் காரணமாகக் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளனர், ஐந்து பேரைக் காணவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை EPA
Image caption மீட்பு பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்

தலைநகர் கொழும்பு உட்பட பல இடங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

இன்று அதிகாலை கடுகன்னவப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு பெண், இரண்டு சிறார்கள் உட்பட ஆறு பேர் புதையுண்டுள்ளனர்.

Image caption பல இடங்களில் நிலைமை மிக மோசமாகவுள்ளதாக செய்திகள்

நாட்டில் நிலவிவரும் மிக மோசமான வானிலை காரணமாக இரண்டு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், கொழும்பில் மட்டுமே ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

பல நதிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், பல அணைகளின் மதகுகள் திறந்துவிடப்பட்டு, உள்ளூர் வாசிகளுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள மழை மற்றும் நிலச்சரிவுகளில் இதுவரை 1300 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மோசமான வானிலை காரணமாக சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் எனவும் பேரிடர் மேலாண்மை நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையிலிருந்து நகர்ந்திருந்தாலும், நாட்டில் தொடர்ந்து மழையும் கடும் காற்றும் இருக்கும் என் அறிவிக்கப்பட்டுள்ளது.

கேகாலை நிலச்சரிவில் சிக்கியவர்களில் 400 பேர் மீட்பு

இலங்கையில் கேகாலை மாவட்டத்திலுள்ள அரநாயக்கா பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை இடம் பெற்ற நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் நடைபெறுகின்றது.

பொலிஸ் மற்றும் இராணுவம் கொண்ட மீட்பு பணியாளர்களினால் இன்று இரவு வரை 400 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே இந்த பிரதேசத்திலுள்ள குடியிருப்பாளர்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

தற்போது மழையுடன் கூடிய காலநிலையும் தொடர்ந்தும் நிலச்சரிவு அபாயமும் இருப்பதால் மீட்பு பணியாளர்கள் சிரமங்களின் மத்தியிலே மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.