இலங்கையில் கடும் மழை: 3 தினங்களில் 11 பேர் பலி

  • 17 மே 2016

இலங்கையில் பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக கடந்த 3 தினங்களில் இதுவரை 11 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 5 பேர் காணாமல் போயுள்ளனர். இலங்கை தலைநகர் கொழும்பு உட்பட பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இன்று அதிகாலை மத்திய மாகாணம் கண்டி மாவட்டத்தில் உள்ள கடுகண்ணாவ பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரு பெண், இரு குழந்தைகள் உட்பட 6 பேர் இறந்தனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். இதுவரை 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சுமார் 2 லட்சம் மக்கள் இந்த இயற்கை பேரிடரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பாதி பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் இலங்கையின் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

தொடர் மழை காரணமாக ஆறுகள் மற்றும் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துக் கொண்டே செல்வதால், மதகுகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், அதன் அருகே வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல முன்னெச்சரிக்கை அறிவிப்பும் விடுக்கப்பட்டுள்ளன.

இந்த இயற்கை பேரிடரில் தீவு முழுவதும் 1,300 வீடுகள் சேதமடைந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் கூறியுள்ளது. மேலும், சுமார் 50,000 குடும்பங்களை சேர்ந்த 2,10,000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

'இந்த பேரிடரால் 1,34,406 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்' என்கிறார் பேரிடர் மேலாண்மை மையத்தின் அதிகாரி ஒருவர். சாலைகளில் வெள்ள நீர் பாய்ந்து ஓடுவதாலும், மண் சரிவு ஏற்பட்டுள்ளதாலும் சில பகுதிகளில் போக்குவரத்து தடைகளும் காணப்படுகின்றது.

இச்சூழலில், குறைந்த காற்றெழுத்த தாழ்வு நிலையானது இலங்கையை விட்டு விலகிச் செல்வதாகவும், இதனால் மழையின் அளவு சற்று குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், காற்றின் வேகம் அதிகமாகவே இருக்கும் என இலங்கை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.