இலங்கை நிலச்சரிவு: 150க்கும் மேற்பட்டோர் நிலை தெரியவில்லை

  • 18 மே 2016

இலங்கை கேகாலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்ற நிலச்சரிவு அனர்த்தங்களின் பின்னர் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், காணாமலும் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று புதன்கிழமை மாலை அரநாயக்க பிரதேசத்திலும், இரவு புலத்கோபிட்டிய பிரதேசத்திலும் இந்த அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன.

அரநாயக்கா பிரதேசத்தில் இடம் பெற்ற நிலச்சரிவு சம்பவத்தின் பின்னர் பாதிப்புக்குள்ளான மூன்று கிராமங்களை சேர்ந்த சுமார் 150 பேர் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகின்றது.

காணாமல் போனதாக கூறப்பட்டவர்களில் இதுவரை 14 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மையம் கூறியுள்ளது.

68 ஆண்களும், 57 பெண்களும் என 125 பேர் காணாமல் போயுள்ளதாக அவர்களின் குடும்ப உறவுகளின் தகவல்கள் மூலம் அறிய முடிவதாக பிபிசி தமிழோசையுடன் பேசிய அரநாயக்க பிரதேச செயலாளரான இஸற் ஏ.எம்.பைஷால் கூறுகின்றார்.

66 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும், 1500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புலத்கோபிட்டிய பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிழந்துள்ளதாக கூறப்படும் 16 பேரில் இதுவரை 5 பேரின் சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது என்கின்றார் சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினரான அ. பாஸ்கரன்.

நிலச்சரிவு அனர்த்தம் பற்றி அந்த பிரதேச செயலகத்தினாலோ அல்லது தோட்ட நிர்வாகத்தினாலோ முன் எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அரநாயக்கா பிரதேசத்திற்கு இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரில் விஜயம் செய்து பாதிக்கப்பட்ட இடங்களையும், அழிவுகளையும் பார்வையிட்டார்.

இந்த நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அனர்த்தங்களினால் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.

இடர் முகாமைத்துவ மையத்தினால் இறுதியாக வெளியிடப்பட்ட தகவல்களின் படி 83,000 குடும்பங்களை சேர்ந்த 3 இலட்சத்து 52 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இக் குடும்பங்களில் 49,000 குடும்பங்களை சேர்ந்த 2 இலட்சத்து 24,000 பேர் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறி 375 நலன்புரி மையங்கள் உட்பட பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.