''நிலச்சரிவில் காணாமல் போனவர்களை உயிருடன் மீட்கும் வாய்ப்பு குறைவு''- இலங்கை ராணுவம்

  • 19 மே 2016

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலை காரணமாக, மலையகப் பகுதியான கேகாலை மாவட்டத்தில் தொடர் மழையும் அதனை தொடர்ந்து நிலச்சரிவும் ஏற்பட்டன. இச்சூழலில், நிலச்சரிவில் சிக்கி 134 பேர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களை உயிருடன் மீட்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இல்லை என்று இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

இலங்கை ராணுவத்தின் தளபதி சுதாந்த ரனசிங்க பிபிசியிடம் பேசுகையில், அரநாயக்க பிரதேச நிலச்சரிவில் சிக்கி உள்ளோரை உயிருடன் மீட்பதற்கான சாத்திய கூறுகள் குறைவு என கூறியுள்ளார். ''நிலச்சரிவு ஏற்பட்ட போது காணமல் போன 134 பேர் இந்நேரம் இறந்திருக்கலாம் என அஞ்சுகிறேன். இருந்தாலும், எங்களுடைய மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும். மீட்கப்படும் சடலங்கள் உடனடியாக உரிய குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும்'' என்றார்.

படத்தின் காப்புரிமை AFP

மேலும், அரநாயக்க பிரதேசத்தில் இதுவரை எந்த உடல்களையும் கண்டெடுக்கவில்லை எனவும், புலத்கோபிட்டிய பிரதேசத்தில் மேலும் 5 உடல்களை மீட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

புலத்கோபிட்டிய பிரதேசத்தில் 16 பேர் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது. இதுவரை அந்த பிரதேசத்தில் 10 பேர் வரை மரணமடைந்துள்ளனர்.