இலங்கையில் மேலும் ஒரு நிலச்சரிவு

  • 21 மே 2016

இலங்கையில் கேகாலை மாவட்டத்திலுள்ள அரநாயக்க பிரதேசத்தில் சனிக்கிழமை மாலை மற்றுமோர் நிலச்சரிவு அனர்த்தம் இடம் பெற்றுள்ளது

Image caption பாதிப்பு தொடர்கிறது

கபரகொல பகுதியில் இந்த நிலச்சரிவு இடம் பெற்றிருப்பதாக இடர் முகாமைத்துவ மையம் கூறுகின்றது.

அந்தப் பகுதியிலுள்ள குடியிருப்பாளர்கள் ஏற்கனவே முன்னெச்சரிக்கையாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மையம் தெரிவிக்கின்றது.

இராணுவம் மற்றும் அதிகாரிகள் அந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சேதங்கள் பற்றி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை .

இதே மழை வெள்ளத்தினால் கடும் பாதிப்புக்குள்ளான கொழும்பு மாவட்டத்தில் களனி ஆற்றின் நீர் மட்டம் குறைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

`உதவிகள் திருப்திகரமாக இல்லை'

களனி ஆற்றின் நீர் மட்டம் குறைவடைந்தாலும் வெள்ள நிலைமையில் மாற்றங்கள் இல்லை என்கின்றார் நாடாளுமன்ற உறுப்பினரான முஜுபுர் ரகுமான்.

தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறியுள்ள குடும்பங்கள் தொடர்ந்தும் பாதுகாப்பு மையங்களிலே தங்கிருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

இந்த குடும்பங்கள் தமது வாழ்வாதரத்தை இழந்துள்ள நிலையில் மீளத் திரும்பிய பின்னர் வாழ்வாதரம் தொடர்பான சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக உள்ளனர். இதற்கான தீர்வை அரசாங்கம் தான் வழங்க வேண்டும் என்றும் முஜுபுர் ரகுமான் வலியுறுத்துகின்றார்.

இதே வேளை கேகாலை மாவட்டத்தில் நிலச்சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பெருந் தோட்ட குடியிருப்பாளர்களுக்கு கிடைக்கும் நிவாரண உதவிகள் திருப்திகரமானதாக இல்லை என சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினரான அண்ணாமலை பாஸ்கரன் கூறுகின்றார்.

போக்குவரத்து பிரச்சினை போன்ற காரணங்களினால் தன்னார்வ தொண்டர் அமைப்புகள் மற்றும் தனி நபர்களின் உதவிகள் அம் மக்களை இதுவரை சென்றடையவில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.