இலங்கை இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு கோரி ப்ளொட் மாநாடு

  • 22 மே 2016

இலங்கையில் தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முடிவு காண்பதுடன், இனப்பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வு காணும் நோக்கிலும், தமிழ் தேசிய கூட்டமைப்பைப் பலப்படுத்தும் நோக்கிலும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி புளொட் அமைப்பு மாநாடு ஒன்றை ஞாயிறு அன்று வவுனியாவில் நடத்தியுள்ளது.

மூன்று வருடங்களுக்கு பின்னர் அந்த அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சித்தார்த்தன் தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றுள்ளது.

இன்றைய அரசியல் சூழலில் தமிழ் மக்கள் ஒரு திருப்பு முனையில் இருப்பதாகக் கூறும் சித்தார்த்தன், இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் அரசியல் தலைமையை ஓரணியில் பலப்படுத்துவது மிக முக்கியமான பணியாகும் எனவும், அந்த நோக்கத்திலேயே தமது கட்சியின் இந்த மாநாடு நடத்தப்பட்டதாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை ஒரு கட்சியாகப் பதிவு செய்வதில் இலங்கைத் தமிழரசு கட்சியினால் பல தடைகள் இருக்கின்ற போதிலும், தற்போதைய அரசியல் நிலைமைகளைத் தமது கட்சி உறுப்பினர்களுக்கும், மக்களுக்கும் தெளிவுபடுத்துவது இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும் என்றார் சித்தார்த்தன்.

தற்போதுள்ள அரசியல் சூழலை, இனப்பிரச்சினைக்கு ஓரு அரசியல் தீர்வு காண்பதற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தமது முக்கிய இலக்காகும் என்றார் அவர்.