தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சம்பந்தன் வாழ்த்து

  • 26 மே 2016

13வது முறையாக சட்டப்பேரவைத் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டிருப்பதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன் வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.

மேலும், தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றாவிட்டாலும் சட்டப்பேரவையில் பலமான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றிருப்பதற்கும் இலங்கை தமிழ் மக்களின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு, ஒரு நியாயமான நிரந்தரமான அரசியல் தீர்வைப் பெறுவதற்கு ஆக்கபூர்வமான பங்களிப்பு தொடர வேண்டுமென்றும் சம்பந்தன் தன் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார்.

விக்னேஸ்வரன் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து

இலங்கைத் தமிழ் மக்கள் தமது அரசியல், சமூக, பொருளதார அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு தமிழகத் தேர்தலில் முதலமைச்சராக வெற்றி பெற்றுள்ள செல்வி ஜெயலலிதா உறுதுணையாக இருப்பார் என்று வட இலங்கையின் மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் வெற்றியை வரவேற்று, அந்த வெற்றியினால் இலங்கைத் தமிழ் மக்கள் மகிழ்ச்சியும் தைரியமும் அடைந்துள்ளதாகக் விக்னேஸ்வரன் கூறியிருக்கின்றார்.

1987 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழ் மக்கள் சார்பில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் முன்னின்று செயற்பட்ட இந்தியா அந்த மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குச் செயற்படுவதற்குத் தூண்டுதலாக இருந்து செயற்படுகின்ற துணிவு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உள்ளது என்றும் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

வியாழனன்று நடைபெற்ற வடமாகாண சபையில் செல்வி ஜெயலலிதாவின் தேர்தல் வெற்றியை வரவேற்று மகிழ்ச்சி வெளியிட்டு உரையாற்றிய முதலமைச்சர் விக்னேஸ்வரன், செல்வி ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசுடன் இணைந்து செயற்படுவதற்கு வடமாகாண சபை தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.