பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு கூலி அதிகரிப்பு கோரி கொழும்பில் போராட்டம்

  • 26 மே 2016

இலங்கையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட நாள் கூலி 100 ரூபாய் அதிகரிப்பை தோட்ட நிர்வாகங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்கள் வியாழக்கிழமையன்று, தலைநகர் கொழும்பில் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Image caption தோட்ட நிர்வாகங்களுக்கு 14 நாள் கெடு

பதினான்கு நாட்களுக்குள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் மலையகம் தழுவிய தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் அறிவித்தனர்.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்த போராட்டத்தில், அமைச்சர்கள் மனோ கணேசன் , பழனி திகாம்பரம் , வி. ராதகிருஷ்ணன் உட்பட தமிழ் முற்போக்கு கூட்டணி அமைச்சர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் , மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த தோட்ட நிர்வாகங்களுக்கும், அரசுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டமைப்பு, ஏற்கனவே 25 நாட்கள் கால அவகாசம் வழங்கியிருந்தது.

இன்றைய சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்கள், இன்னும் 14 நாட்களுக்குள் இந்த சம்பள அதிகரிப்பை தோட்ட நிர்வாகங்கள் வழங்க வேண்டும் என காலக்கெடு விதித்தனர்.

தற்போது தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் கூலியாக ரூபாய் 620 வழங்கப்படுகின்றது. இதனை ரூபாய் 1000 ஆக உயர்த்த வேண்டும் பிரதான தொழிற்சங்கங்கள் கோரிக்கையை முன் வைத்தன. தோட்ட நிர்வாகங்கள் அதனை நிராகரித்து விட்டன..

இடைக்காலத் தீர்வாக ரூபாய் 100 சம்பள அதிகரிப்பு வழங்குவது என நாடாளுமன்றத்தில் தீர்மானம் கடந்த மார்ச் மாதம் சட்ட மூலமாக கொண்டு வரப்பட்டு நிறைவேற்றன.

தோட்டங்களில் நஷ்டம் , தேயிலை உற்பத்தி வீழ்ச்சி , உலக சந்தையில் விலை குறைவு என்ற காரணங்களை முன் வைத்து இதனையும் வழங்க தோட்ட நிர்வாகங்கள் மறுத்து விட்டன.

இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுடன் தமிழ் முற்போக்கு கூட்டணி சென்ற வாரம் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் சாதகமான பேறுகள் கிட்டவில்லை.

இரு நாட்களுக்கு முன்னதாக, தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசநாயக்கா உள்பட உரிய அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுக்களும் தோல்வியில் முடிந்ததன.