சட்ட விரோத சிறுநீரக வியாபாரம்: 7 ஏழு இந்திய பிரஜைகளின் பிணை மனுக்கள் நிராகரிப்பு

  • 31 மே 2016

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நடைபெற்று வரும் சட்ட விரோத சிறுநீரக வியாபாரம் சம்பந்தமாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏழு இந்திய பிரஜைகளின் பிணை மனுக்களை நிராகரிப்பதாக கொழும்பு மாஜிஸ்ட்ரேட் அறிவித்துள்ளார்.

Image caption சிறுநீரக வியாபாரம் சம்பந்தமாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்

ஆனால், சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணைகளை துரிதமாக முடிவிற்கு கொண்டுவருமாறு நீதிபதி போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்ததாக சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் லக்ஷான் டயஸ் தெரிவித்தார்.

இன்று வழக்கு அழைக்கப்பட்டபோது கருத்துக்களைத் தெரிவித்த போலீசார் சட்ட விரோத சிறுநீரக வியாபாரத்தை மேற்கொள்வதற்கு இலங்கை ஒரு முக்கிய இடமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றதா என்பது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சட்ட மா அதிபர் தங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அறிவித்தனர்.

சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டால் அதன் மூலம் விசாரணைகளுக்கு பாதிப்புக்கள் ஏற்பட அவகாசம் இருக்கின்ற காரணத்தினால் அவர்களை மேலும் தடுப்பு காவலில் வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர் தரப்பின் வழக்கறிஞர் இது குறித்து பரந்த அளவில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமானால் சிறுநீரக அறுவை சிகிட்சைகளுக்கு அனுமதி வழங்கிய சுகாதார சேவை பணிப்பாளர் பாலித மகிபால உட்பட பிரதான வைத்தியர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படவேண்டுமென்று தெரிவித்தார்.

சுகாதார சேவை பணிப்பாளர் பாலித்த மஹிபால எனும் அதிகாரி, தான் கடந்த சில ஆண்டுகளாக இலங்கையில் மேற்கொள்ளப் பட்ட சிறுநீரக அறுவை சிகிட்ச்சைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக வழக்கறிஞர் லக்ஷான் டயஸ் தெரிவித்தார்.

அவர்களை கைது செய்வதை தவிர்த்து போலீசார் சந்தேக நபர்களை 90 நாட்களுக்கும் மேல் தடுப்பு காவலில் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாதென்று கூறிய வழக்கறிஞர் இந்திய அரசாங்கத்தில் அழுத்தங்கள் காரணமாகவே போலீசார் இவ்வாறு செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

கருத்துக்களை ஆராய்ந்த நீதிபதி சந்தேக நபர்களை வரும் 14-ஆம் தேதி வரை விலக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றங்களை நீதிமன்றத்தில் அறிவிக்குமாறு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.