ராணுவ முகாம் தீ விபத்தில் ஒருவர் பலி

  • 6 ஜூன் 2016

கொழும்பு நகரை அடுத்த அவிசாவளை, சாலாவ ராணுவ முகாமில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில், ராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்திருப்பதாக சுகாதார சேவை பணிப்பாளர் பாலித மகிபால தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை

அதேபோன்று காயமடைந்த மூன்று ராணுவத்தினர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெடி விபத்து காரணமாக காயமடைந்த சாதாரண மக்கள் 47 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக கூறிய டாக்டர் மஹிபால 37 பேர் சிகிட்ச்சைகளை பெற்று வெளியேறி சென்றுள்ளதாக தெரிவித்தார்.

திங்கட்கிழமை காலையிலும் ராணுவ முகாமுக்குள் இருந்து அடிக்கடி வெடிச் சத்தங்கள் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். முகாமில் இருந்து ஒரு கிலோமிட்டர் சுற்றுப் பிரதேசத்தில் இருந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்ட மக்களுக்கு மீண்டும் அவர்களது வீடுகளுக்குத் திரும்ப, ராணுவத்தினர் இதுவரை அனுமதி தரவில்லை என்றும் தெரிவித்தனர்.

கொழும்பு – அவிசாவளை பிரதான வீதி தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.

இந்த வெடி விபத்து காரணமாக, சுற்றச்சூழல் பெருமளவு மாசடைந்துள்ளதாகத் தெரிவித்த சுகாதார சேவை பணிப்பாளர், குடிநீரை பெற்றுக் கொள்ளும் கிணறுகளை மூடி வைக்குமாறு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் அறிவித்தார்.