தமிழ் - சிங்கள பிரதேச வைத்தியசாலைகளுக்கான நிதி ஒதுக்கீடு: தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றச்சாட்டு

இலங்கையில் மத்திய அரசினால் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி பகிர்வில் தமிழ் - சிங்கள பிரதேச வைத்தியசாலைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

Image caption கிழக்கு மாகாண சபை உறுப்பினரான இரா. துரைரெத்தினம்

இந்த குற்றச்சாட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான இரா. துரைரெத்தினம் முன் வைத்துள்ளார்.

மத்திய அரசினால் கிழக்கு மாகாணத்திலுள்ள 16 வைத்தியசாலைகள் அபிவிருத்திக்காக 10 ஆயிரத்து 633 மில்லியன் நிதி மாகாண சுகாதார அமைச்சுக்கு இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந் நிதி மூலம் முஸ்லிம் பிரதேசம் -12 , தமிழ் பிரதேசம் - 02 .சிங்கள பிரதேசம் - 02 என வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்வதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

திருகோணமலை மாவட்டத்தில் தேர்வாகியுள்ள 4 வைத்திய சாலைகளும் முஸ்லிம் பிரதேசங்களிலிருந்தே தேர்வாகியுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து ஒரு வைத்தியசாலையும் தேர்வாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிதி ஒதுக்கீட்டில், 90 சத வீதத்திற்கும் மேலான நிதி முஸ்லிம் பிரதேசங்களிலிருந்து தேர்வாகியுள்ள 12 வைத்தியசாலைகளின் அபிவிருத்திக்காக ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினரான இரா. துரைரெத்தினம் தெரிவித்துள்ளளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பு நகரிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இது தொடர்பாக விளக்கம் அளித்த அவர், இம் மாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து ஒரு வைத்தியசாலை கூட தேர்வாகவில்லை என்றும் சுட்டிக் காட்டினார்.

முஸ்லிம் பிரதேச வைத்தியசாலைகளுக்கு நிதி ஓதுக்கீடு செய்யப்படுவதை தான் எதிர்க்கவில்லை என்றும் தமிழர்கள் மற்றும் சிங்களவர் வாழும் பிரதேச வைத்தியசாலைகளை புறக்கணிப்பதாக நிதி ஒதுக்கீடு இருக்க கூடாது என்பதே தமது கோரிக்கை என்றும் அவர் வலியுறுத்தி கூறினார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட இரா. துரைரெத்தினம் '' தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இருவர் மாகாண அமைச்சர்கள் வாரியத்தில் இருக்கின்றார்கள். அப்படி இருந்தும் தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் போது ஆட்சியில் இருக்க வேண்டுமா ? " என தமிழ் மக்களால் முன் வைக்கப்படும் கேள்வியின் நியாயத் தன்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.