அனைவருக்கும் சமமான சட்டம் கோரி கொழும்பில் போராட்டம்

  • 8 ஜூன் 2016

சட்டத்தை எல்லோருக்கும் சமமாக அமல்படுத்தும் படி நீதிமன்றங்களை வலியுறுத்தும் அமைதி போராட்டமொன்று இன்று கொழும்பில் நடைபெற்றது.

Image caption அனைவருக்கும் சமமான சட்டம் கோரி கொழும்பில் போராட்டம்

கொழும்பு உச்ச நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள நீதிச் சேவை ஆணைக்குழு முன்பாக இன்று பகலில் இந்த போராட்டம் நடைபெற்றது.

சுற்றாடல் அமைப்புகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் அங்கத்தவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு கருத்துக்களை தெரிவித்த சுழல் பாதுகாப்பு நிதியத்தின் சத்திய வேல் விஸ்வலிங்கம் அனுமதி பத்திரமின்றி யானை குட்டியொன்றை வைத்திருந்தமை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் நீதிபதி திலின கமகேவிட்கு பிணை வழங்கிய பொது நுகேகொட மாஜிஸ்ட்ரேட் நீதிபதி வழமைக்கு மாறாக செயல்பட்டதாக குற்றம் சாட்டினார்.

பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத நிலையில் சந்தேக நபரான முன்னாள் நீதிபதி கமகேவிட்கு விடுதலையாகி செல்ல நுகேகொட மஜிஸ்ட்ரேட் நீதிபதி அனுமதியளித்தமை கண்டிக்கத்தக்கது என்று கூறிய அவர் இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் பொது மக்கள் நீதிமன்றங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இழப்பதற்கு வாய்ப்புக்கள் இருப்பதாக எச்சரித்தார்.

இதேவேளையில், நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையீடுகளை மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சிலர் கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் முன் அமைதி போராட்டமொன்றை மேற்கொண்டனர்.

அங்கு கருத்துக்களை தெரிவித்த வழக்கறிஞர் பி.டி.பெரேரா, நீதிபதிகள் மீது பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி நீதிமன்றங்களுக்கு எதிராக போராட்டங்களை மேற்கொள்வதை கண்டிப்பதாக தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது, நீதிச் சேவை ஆணைக்குழு முன் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருந்தது.