இலங்கை நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டும் பணி

  • 9 ஜூன் 2016
Image caption வீடமைப்பு தொகுதிக்கான வேலைகளை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது

இலங்கையில் கேகாலை மாவட்டத்தில் நிலச்சரிவு அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பெருந்தோட்ட குடியிருப்பாளர்களுக்கான முதலாவது வீட்டுத் தொகுதிக்கான நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.

மலை நாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சினால் 100 வீடுகளை கொண்டதாக இந்த வீடமைப்பு தொகுதி அமையும் என ஏற்கனவே அமைச்சர் பழனி திகாம்பரம் அறிவித்திருந்தார்.

இன்றைய நிகழ்வில் அமைச்சர்கள் பழனி திகாம்பரம், மனோ கணேசன் மற்றும் வீ. ராதகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் கலந்து கொள்ளவில்லை.

நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கா மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்தான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு காரணமாகவே அவர்கள் கலந்து கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.

வீடமைப்பு தொகுதிக்கான வேலைகளை பெருந்தோட்ட மனித வள நிதியத்தின் தலைவர் வீ. புத்திரசிகாமணி தொடங்கி வைத்தார்.

Image caption நிரந்திர வீட்டை எதிர்பார்த்து தற்காலிக தங்குமிடங்களில் குடியிருப்பாளர்கள்

கடந்த மாதம் 16ம் திகதி நிலச்சரிவு அனர்த்தம் ஏற்பட்ட களுபாஹன தோட்டத்தில் பாதுகாப்பான இடமொன்றில் இந்த வீடமைப்பு தொகுதி அமைகின்றது.

இந்த நிலச்சரிவு அனர்த்தத்தில் புதையுண்டு பெண்கள், குழந்தைகள் உட்பட 6 குடும்பங்களை சேர்ந்த 16 பேர் பலியாகினர்.

இந்த தோட்டத்திலுள்ள குடியிருப்பாளர்களின் குடியிருப்பு தொகுதி ஒரு நூற்றாண்டுக்கு மேல் பழமை வாய்ந்தது.

போதிய அடிப்படை வசதிகள் இல்லை. தொடர்ந்தும் நிலச்சரிவு அபாயம் இருப்பதால் ஏற்கனவே வசித்த குடும்பங்கள் தற்போது தற்காலிக கூடாரங்களில் தங்கியுள்ளன.

இன்றைய நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா, மத்திய மாகாண சபை உறுப்பினர் சரஸ்வதி சிவகுரு உட்பட பலரும் கலந்து கொண்டனர்.