இலங்கை நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி

  • 9 ஜூன் 2016

இலங்கை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் 94 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை Getty
Image caption இலங்கை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க

இதனை, வாக்கெடுப்பின் பின்னர் சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.

தீர்மானத்திற்கு ஆதரவாக 51 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிராக 145 வாக்குகள் கிடைத்தன.

மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களும், கூட்டு எதிர்கட்சியின் உறுப்பினர்களுடன் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன, கடந்த வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்த போது நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பொருளாதாரம் தொடர்பாக தவறான புள்ளி விவிரங்களை நாடாளுமன்றதில் சமர்ப்பித்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

தற்போது அரச நிதி நிர்வாகத்தில் பாரிய முறைகேடுகள் இடம்பெற்று வருவதாக கூறிய தினேஷ் குணவர்த்தன, அத்தியாவசிய பொருட்கள் மீது அதிக வரி விதிப்பதன் மூலம் நிதி அமைச்சர் பொது மக்களை மேலும் சிரமத்தில் ஆழ்த்தியுள்ளதாக குற்றம்சாட்டினார்.

இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் நிதி அமைச்சர் மீது நாடாளுமன்றம் வைத்திருந்த நம்பிக்கையை இழந்துள்ளதாக கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குனவர்த்தன, ஆதலால் கருணாநாயக்க தொடர்ந்து அமைச்சர் பதவி வகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்ககையில்லாத் தீர்மானத்தின் மூலம் எதிர்கட்சியினர் அரசியல் லாபங்களை பெற முயற்சிப்பதாக ஆளும் கட்சியின் சார்பில் உரையாற்றிய அமைச்சர் ரிஷாத் பதியூதின் குற்றம்சாட்டினார்.

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தனது கருத்துக்களை தெரிவித்த போது, அரச நிதித் துறையில் கடந்த ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல்களை எதிர்த்து நடவடிக்கை எடுத்ததன் காரணமாகவே எதிர்கட்சியினர் தன் மீது பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகத் தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் தேசிய பொருளாதாரம் பாரிய வளர்ச்சி கண்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் கருணாநாயக்க, நாடு அபிவிருத்தியை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

தாங்கள் சுமத்திய அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க எதிர்க் கட்சியினர் இன்று தவறியுள்ளதாகவும் அமைச்சர் ரவி கருணாநாயக்க மேலும் தெரிவித்தார்.

வாக்கெடுப்பு நடைபெறும்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.