பள்ளிவாசல் நிர்மாணப்பணிக்குத் தடை: முஸ்லிம் அமைச்சர்கள், எம்.பி.க்கள் முறையீடு

Image caption பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள பள்ளிவாசல் நிர்வாகமும், முஸ்லிம் அரசியல் தலைமைகளும்

இலங்கை தலைநகர் கொழும்புக்கு வெளியே தெகிவளை பள்ளிவாசல் நிர்மாணப் பணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையில் காவல்துறையின் தலையீடு காணப்பட்டதா என முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களினால் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளன.

காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல இரத்நாயக்காவுடன் இடம் பெற்ற சந்திப்பில் இந்த குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் ரிஷாத் பதியுதீன், கபீர் ஹாசீம், பைஸார் முஸ்தபா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரகுமான், எஸ்.எம் மரிக்கார் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

சட்ட ரீதியான அனுமதி

பள்ளிவாசல் நிர்மாண பணிகளுக்கு தெகிவளை - கல்கிசை மாநகர சபையினால் ஏற்கனவே சட்ட ரீதியான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்த அனுமதியின்படி, ஆகஸ்ட் 24ஆம் தேதி வரையிலான கால எல்லைக்குள் நிர்மாணப் பணிகள் முடிவடைய வேண்டும் என பள்ளி வாசல் நிர்வாகம் கூறுகின்றது.

தற்போது, மாநகர மேயரால் எழுத்து மூலம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவொன்றின்படி நிர்மாணப் பணிகள் கடந்த சில நாட்களாக இடை நிறுத்தப்பட்டுள்ளன.

பெளத்த பிக்குமார்களால் தற்காலிக தடை

பௌத்த பிக்குமார்கள் உட்பட பௌத்த கடும் போக்காளர்களிடமிருந்து தெரிவிக்கப்பட்டு வந்த எதிர்ப்புகள் காரணமாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்காலிகமாக தடை விதிப்பதாக மாநகர முதல்வரால் வழங்கப்பட்ட கடிதமொன்றை பயன்படுத்திய காவல் துறை இதில் தலையிட்டு நிர்மாண வேலைகளுக்கு தடை விதித்ததாக முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களினால் தெரிவிக்கப்படுகின்றன.

''நீதிமன்றத்தை நாடுவோம்''

இந்த விவகாரத்தை சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்த போது, இனிமேல் அவ்வாறு நடை பெறாது என்ற உத்தரவாதமும், உறுதி மொழியும் அவரால் தரப்பட்டதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கூறுகின்றார்.

மேலும், சட்ட ரீதியான அங்கீகாரம் அனைத்தும் இருப்பதால் நிர்மாணப் பணிகளை முன்னெடுப்பதில் எவ்விதமான தடையும் இல்லை எனவும், மூன்று நாட்களுக்குள் சுமூகமான தீர்வொன்று பெற்றுத் தரப்படும் என்றும் அமைச்சர் பதில் தெரிவித்துள்ளதாக ரிஷாத் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.

பள்ளிசாசல் நிர்மாணப் பணிகளை தொடர்வதற்கு சட்ட ரீதியான அங்கீகாரம் இருந்தும் எதிர்ப்புகளும் தடைகளும் தொடருமானால் நீதிமன்றத்தை நாடவும் பள்ளி வாசல் நிர்வாகமும், முஸ்லிம் அரசியல் தலைமைகளும் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.