நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மாகாணங்கள்: அனர்த்த நிலைமை பிரதேசங்களாக இலங்கை பிரகடனம்

இலங்கையில் ஆறு மாகாணங்கள், ஜனாதிபதியினால் அனர்த்த நிலைமைகள் பிரதேசங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அழிவுகளையடுத்தே ஜனாதிபதியினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது..

ஜனாதிபதியின் ஆணையின் பேரில் இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் கீழ், ஜனாதிபதியின் செயலாளரினால் இது தொடர்பான வர்த்தமானியும் அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் செயலாளர் பீ. பீ. அபேயகோன் வெளியிட்டுள்ள வர்த்தமானி பிரகடனத்தில் மேல், மத்திய, வடமேல், சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களே அனர்த்த நிலைமை பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இம் மாகாணங்களில் அவசர பேரிழிவுகளின் போது, பொது மக்களின் பாதுகாப்பு, பொது ஒழுங்கினைப் பாதுகாத்தல், சமூதாய வாழ்க்கைக்கு இன்றியமையாத வழங்கல்களையும் சேவைகளையும் வழங்கல் ஆகியவற்றை கருத்தில் கொண்டே இந்த பிரகடனம் வெளியிடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்று.

இம் மாகாணங்களில் அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற அனர்த்தங்களினால் 70 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு தமது வாழ்விடங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.

இக் குடும்பங்களில் சுமார் 2500 குடும்பங்கள் தமது இருப்பிடங்களை இழந்த நிலையிலும் இருப்பிடங்களுக்கு திரும்ப முடியாத நிலையிலும் தற்காலிக இடங்களிலே தங்கியுள்ளன.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 89 பேர் இறந்தனர். நிலச்சரிவுகளில் புதையுண்டவர்களில் 102 பேர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ள போதிலும், மூன்று வாரங்கள் கடந்து விட்ட நிலையில் இவர்களும் இறந்திருக்கலாம் என உறவினர்களும் அதிகாரிகளும் கருதுகின்றனர்.