இலங்கை வெள்ளத்தில் வீடிழந்தவர்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டுவதில் தாமதம்

இலங்கையின் கொழும்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது வீடுகளை இழந்தவர்களுக்கு நிரந்தர வீடுகளை அமைப்பதில் தாமதங்கள் ஏற்படலாம் என கூறப்படுகின்றது.

Image caption கொலன்னாவ பிரதேச மக்களிடம் குறைகளை கேட்டறிந்த ரணில்

இம் மாவட்டத்தில் வெள்ளத்தினால் கடும் பாதிப்புக்குள்ளான பிரதேசம் என அடையாளம் காணப்பட்ட கொலன்னாவ பிரதேசத்திற்கு சென்றிருந்த ரணில் விக்கிரமசிங்க, இதனை தெரிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

வெளிநாட்டு கடன்கள் உள்பட அரசாங்கம் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடிகளை சுட்டிக்காட்டி மக்கள் சற்று பொருத்திருக்க வேண்டும் என பிரதம மந்திரி தங்களை கேட்டுக் கொண்டதாக கொலன்னாவ பிரதேச பள்ளி வாசல் நிர்வாகத்தின் தலைவரான மொகமட் பைரூஸ் தெரிவித்தார்.

வீடுகளை இழந்தவர்களுக்கு என வீடுகளை அமைப்பற்கு அங்கொட பகுதியில் 150 - 200 ஏக்கர் காணி அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த இடத்தில் வீடுகள் அமைத்துத் தரப்படும் என்ற உறுதிமொழியை பிரதம மந்திரி வழங்கியதாகவும், அவர் தெரிவிக்கின்றார்.

தமது பிரதேசத்தில் சுமார் 70 சதவீத குடும்பங்கள் தான் வழமைக்கு திரும்பியுள்ளன. வீடுகளை இழந்துள்ள குடும்பங்கள் மைதானமொன்றில் கூடாரங்கள் அமைத்தும் பாடசாலையொன்றிலும் தங்கியிருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

இதனிடையே, இம்மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு அரசாங்க நிவாரணமாக முதற்கட்டமாக தற்போது ரூ. 10 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்ட கொடுப்பனவாக மேலும் ரூ. 25 ஆயிரம் வழங்கப்படும் என கொலன்னாவ பிரதேச மக்கள் சந்திப்பில் மந்திரி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.