அனுமதியின்றி யானைக்குட்டி வைத்திருந்த முன்னாள் எம்.பி.க்கு பிணை

அனுமதி பத்திரமின்றி யானை குட்டியொன்றை வைத்திருந்தது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரரை ரூ. 20 மில்லியன் மதிப்பிலான பிணையின் கீழ் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Image caption உடுவே தம்மாலோக தேரர்

இன்று இந்த வழக்கு அழைக்கப்பட்ட போது நீதிமன்றத்தில் ஆஜராகிய தம்மாலோக தேரோவிடம் குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுக்களுக்கு தான் நிரபராதி என்று தம்மாலோக தேரர் பதிலளித்தார். அதன் பின்னர் பிணை வழங்கிய நீதிபதி தம்மாலோக தேரரின் வெளிநாட்டு பயணங்களை முற்றாக தடை செய்வதாக உத்தரவிட்டார்.

அதே போன்று இந்த வழக்கு தொடர்பாக தவறான தகவல்களை கூறுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அவருக்கு மேலும் உத்தரவிடப்பட்டது.

வழக்கு விசாரணை முடிவடைந்த பின்னர் ஊடகங்களிடம் கருத்துக்களை தெரிவித்த உடுவே தம்மாலோக தேரர், இந்த குற்றச்சாட்டுக்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாக தெரிவித்தார்.

வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்ற காரணத்தால், இது குறித்த மேலதிக தகவல்களை கூற முடியாதென்று தெரிவித்த அவர், இந்த வழக்கு முடிவடைந்த பின்னர் விவரங்களை நாட்டு மக்களுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலதிக வழக்கு விசாரணை ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.