மொஹோமத் முசம்மிலுக்கு ஜுலை 4-ஆம் தேதி வரை விளக்க மறியல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்து வரும் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மொஹோமத் முசம்மிலை ஜுலை 4-ஆம் தேதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை மாஜிஸ்ட்ரேட் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Image caption இன்று கைது செய்யப்பட்ட மொஹோமத் முசம்மில்

கடந்த ஆட்சி காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது, ஜனாதிபதி செயலகத்தின் வாகனமொன்றை பெற்றுக் கொண்டு அதனை மீண்டும் கொடுக்காமல் அரசாங்கத்திற்கு சுமார் 62 இலட்சத்திற்கும் மேற்பட்ட அரச நிதியை மோசடி செய்ததாக குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.

இதனால் முசம்மிலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், விசாரணைகள் பூர்த்தி செய்யப்படாததன் காரணமாக அவரை விளக்க மறியலில் வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த குற்றச்சாட்டுக்களை தாங்கள் நிராகரிப்பதாக, எதிர்தரப்பின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இரு தரப்பு கருத்துக்களை ஆராய்ந்த நீதிபதி முசம்மிலை ஜுலை 4-ஆம் தேதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

வழக்கு விசாரணை முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துக்களை தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பிரேமரத்ன, இது ஒரு அரசியல் பழிவாங்கலென்று குற்றம்சாட்டினார்.

நாட்டை பிரிவினைவாதம் நோக்கி எடுத்துச் செல்லக் கூடிய ஒரு புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அவர், அதனை எதிர்க்கும் நபர்களை முடக்குவதற்காகவே இவ்வாறான கைதுகளை அரசாங்கம் மேற்கொள்வதாக குற்றம் சாட்டினார்.

இவ்வாறான அச்சுறுத்தல்களின் மூலம் பிரிவினைவாதத்தை எதிர்க்கும் நபர்களை முடக்க முடியாதென்று தெரிவித்த பிரேமரத்ன, அரசாங்கத்தின் முயற்சிகளை தோற்கடிக்க சகல நடவடிக்கைகளையும் தாங்கள் மேற்கொள்ளவுள்ளதாக எச்சரித்தார்.