முன்னாள் நீதிபதி திலின கமகே பிணையில் விடுதலை

அனுமதி பத்திரமின்றி யானை குட்டியொன்றை வைத்திருந்தது தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் நீதிபதி திலின கமகேவை கடும் நிபந்தனைகள் கொண்ட பிணையின் கீழ் விடுதலை செய்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி, ரூ. 60 லட்சம் மதிப்பிலான பிணையின் கீழ் நீதிபதி கமகேவை விடுதலை செய்த மேல் நீதிமன்றம், அவர் வாரத்திற்கு ஒரு முறை கொழும்பு குற்ற புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராக வேண்டுமென்று உத்தரவிடப்பட்டது.

அதே போன்று கமகேவின் வெளிநாட்டு பயணங்களை தடை செய்த நீதிமன்றம், விசாரணைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தினால் அவரது பிணை ரத்துச் செய்யப்பட்டு வழக்கு விசாரணை முடிவடையும் வரை விளக்க மறியலில் வைக்கப்படுவார் என்று சந்தேக நபரான நீதிபதி கமகேவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த இரண்டாம் தேதியன்று நுகேகொட மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தினால் சந்தேக நபரான திலின கமகேவிற்கு பிணை வழங்கப்பட்டது.

இந்த பிணை வழங்கப்பட்ட விதம் சட்ட விரோதமானதென்று தீர்ப்பளிக்குமாறு கோரி சட்ட மா அதிபர் தாக்கல் செய்த மனுவொன்றை விசாரணை செய்த மேல் நீதிமன்றம், நுகேகொட மாஜிஸ்ட்ரேட் நீதிபதியின் பிணை உத்தரவு சட்டத்திற்கு மாறானதென்று உத்தரவிட்டது.

எனவே, அதனை ரத்து செய்வதாக தெரிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி, இந்த கடும் நிபந்தனைகள் கொண்ட புதிய பிணை உத்தரவொன்றை பிறப்பித்தார்.