இலங்கை சிறைகளை சீரமைக்க அரசு முடிவு

  • 22 ஜூன் 2016

இலங்கையில் நகரப் பிரதேசங்களிலுள்ள சிறைச்சாலைகளை இட வசதியுடன் கூடிய மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதிகளுக்கு இட மாற்றம் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

புனர்வாழ்வு , புனரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் முன் வைத்த இது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவையும் ஓப்புதல் வழங்கியுள்ளள்ளது.

அமைச்சரவை பேச்சாளரும் தகவல் மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சருமான கயந்த கருணாத்திலகா அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பாக அமைச்சரை வழங்கிய ஓப்புதலில் கொழும்பு, காலி, மாத்தறை, பதுளை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலைகளை இடமாற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளை சீர்த்திருத்த நிலையங்களாக மாற்றியமைக்கும் நோக்கில் சிறைச்சாலைகளில் துரித மறுசீரமைப்பை மேற்கொள்ளும் தேவை அரசாங்கத்தினால் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கயந்த கருணாதிலக கூறுகின்றார்.

அந்த அடிப்படையில் சன அடர்த்தியான பகுதிகளிலுள்ள சிறைச்சாலைகளை மக்கள் நடமாட்டம் அற்ற பகுதிகளுக்கு மாற்றும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் சிறைச்சாலைகளை இடமாற்றுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு நியமிக்கப்பட்டுள்ள குழுவின் சிபார்சின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவிக்கின்றார் .

மட்டக்களப்பு நகரிலுள்ள சிறைச்சாலை 75 வருடங்களுக்கு மேல் பழமையானது