இலங்கையில் மது விற்பனையில் யாழ் மாவட்டம் முன்னிலை: சிறிசேன

  • 26 ஜூன் 2016

இலங்கையில் சட்ட ரீதியான மது விற்பனையில் வடக்கு , கிழக்கு மற்றும் மலையகத்தை சேர்ந்த மூன்று மாவட்டங்கள் முன்னிலையில் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Image caption நுவரெலியா நகரில் நடைபெற்ற மது ஓழிப்பு நிகழ்ச்சியில் மைத்திரிபால சிறிசேன

ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை நுவரெலியா நகரில் நடைபெற்ற மது ஓழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்றில் உரையாற்றிய போது, அவர் இதனை தெரிவித்திருக்கின்றார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், சட்ட ரீதியான மது விற்பனையில் யாழ் மாவட்டம் முதலிடத்தில் இருப்பதாக கூறினார்

நுவரெலியா மாவட்டம் இரண்டாவது இடத்திலும், மட்டக்களப்பு மாவட்டம் மூன்றாவது இடத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் 18 சதவீத மக்கள் போஷாக்கின்மையை எதிர்கொள்கின்றார்கள். நுவரெலியா மாவட்டத்தில் போஷாக்கின்மை கூடுதலாக காணப்படுவதாக சுகாதார அமைச்சு கூறுகின்றது.

இம் மாவட்டத்தில், சட்ட விரோத மது மற்றும் போதைப் பொருள் பயன்பாடு தவிர்த்த சட்ட ரீதியான மது மற்றும் புகைத்தலுக்கு வருடாந்திரம் 1600 கோடி ரூபாய் மக்களால் செலவு செய்யப்படுவதாக கூறப்படுகின்றது

இதனை, தனது உரையில் சுட்டிக் காட்டிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இம் மாவட்டத்திலுள்ள பெருந் தோட்ட மக்களின் வறுமையையும் போஷாக்கின்மையை ஒழிப்பதற்கு சகல தரப்பும் அர்ப்பணிப்புடன் செயல்பட முன்வரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

உள் நாட்டு மக்களிடையே காணப்படும் ஏழ்மைக்கும், வறுமைக்கும் மது மற்றும் போதைப் பொருள் பயன்பாடும் பிரதான காரணம் இருப்பதாக தனது உரையில் சுட்டிக் காட்டிய அவர், சட்ட ரீதியான மது பயன்பாட்டுக்கும், புகைத்தலுக்கும் 3200 கோடி ரூபாய் மக்களால் வருடாந்திரம் மக்களால் செலவு செய்யப்படுகின்றது. என்றும் குறிப்பிட்டார்.