இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்ற யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களின் காணிகளை மீண்டும் ஒப்படைத்து, அவர்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்ற வேண்டும் என கோரி திங்களன்று யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய முற்றத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

Image caption இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்ற யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

இதற்கான அழைப்பை வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற குழு விடுத்திருந்தது.

கடந்த 1990-ஆம் ஆண்டு வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயரச் செய்யப்பட்ட குடும்பங்களில், 10 ஆயிரம் குடும்பங்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாமல் 32 நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர்.

இவர்களை ஆறு மாத காலத்தில் மீள்குடியேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அந்த மக்களிடம் நேரடியாக உறுதியளித்திருந்தார்.

அந்த காலக்கெடு முடிவடைந்துவிட்ட போதிலும், ராணுவத்தின் பிடியில் உள்ள வலிகாமம் வடக்கு காணிகளை விடுவிப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவர் குணபாலசிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.

வலிகாமம் வழக்கு காங்கேசன்துறை பகுதியில் 200 ஏக்கர் காணிகள் ராணுவத்தினரால், இரு தினங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்ட நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, ராணுவத்தின் வசமுள்ள காணிகளில் ராணுவத்தின் பயன்பாட்டிற்குரிய காணிகள் போக, எஞ்சிய காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார்.

இந்த நடவடிக்கை வரும் 2018-ஆம் ஆண்டிற்குள் முடிவடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.