தாக்குதல் நடத்த உதவிய தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தாபய ராஜபக்ஷ

  • 27 ஜூன் 2016

தன் மீது தற்கொலை குண்டு தாக்குதல் நடத்த உதவியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க தன்னால் முடியாதென்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

Image caption நீதிமன்றத்தில் சாட்சியளித்த கோத்தாபய ராஜபக்ஷ

கொழும்பில், கடந்த 2006-ஆம் ஆண்டு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் பயணித்த வாகனம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்த உதவியதாக நான்கு தமிழ் கைதிகளுக்கு எதிராக தாக்கல் செய்துள்ள வழக்கு இன்று அழைக்கப்பட்ட போது, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ சாட்சியளித்தார்.

அதன் பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த கோத்தாபய ராஜபக்ஷ, தன் மீது குண்டு தாக்குதலை மேற்கொள்ள உதவியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கும் நோக்கம்தனக்கு இல்லை என்று தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் விசாரணையொன்று நடத்தப்பட்டு வருவதாக கூறிய அவர், பொது மன்னிப்பு வழங்குவது குறித்து அரசாங்கமே தீர்மானம் எடுக்க வேண்டுமென்று அறிவித்தார்.

மேலும், கருத்துக்களை தெரிவித்த கோத்தாபய ராஜபக்ஷ தனக்கு வழங்கப்பட்டுள்ள ராணுவ பாதுகாப்பை நீக்குவதற்கு அரசாங்கம் தயாராகிவருவதாக குற்றம்சாட்டினார்.

இதனால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்த அவர், எனவே இந்த தீர்மானத்தை மீண்டும் பரிசீலனை செய்யுமாறு தற்போதைய பாதுகாப்பு செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்தார்.