சட்டவிரோத கைது, சித்ரவதை: இலங்கை அரசுக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையர் வலியுறுத்தல்

  • 28 ஜூன் 2016

இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து, இடைக்கால வாய்மொழி ஆண்டறிக்கையை ஜெனிவாவில் உள்ள ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் சமர்ப்பித்த ஐநா மனித உரிமை கவுன்சில் ஆணையர் செய்த் ராத் அல் ஹூசேன், தொடரும் சட்டவிரோத கைதுகள், சித்ரவதைகள் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை உடனடியாகக் கவனித்து களைய வேண்டும் என இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளார்.

அதே நேரத்தில், இலங்கை அரசு காணாமல் போனோர் பிரச்சினை குறித்து ஆராய அமைத்த அலுவலகம், காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு ஏதோ ஒரு வடிவத்தில் நீதி வழங்கும் என்று நம்புவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஹுசேன் அளித்த இந்த ஒன்பது பக்க அறிக்கையில், கடந்த பதினெட்டு மாதங்களில் இலங்கையின் புதிய அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகளை ஆராய்ந்து காணிகளை மக்களுக்கு திரும்ப தருவது, பயங்கரவாத தடை தடுப்பு சட்டத்தை திருத்துவது, தடுப்பு காவலில் உள்ளோரை விடுதலை செய்வது போன்ற விசயங்களில் இலங்கை அரசு மேலும் கூடுதலான முன்னேற்றத்தை காட்டியிருக்காலம் என்றார்,

மேலும், தொடரும் சட்டவிரோத கைதுகள், சித்ரவதை, பாலியல் வன்முறை போன்ற குற்றச்சாட்டுகளும் ராணுவ கண்காணிப்பு மற்றும் தொந்தரவு போன்றவை குறித்த குற்றச்சாட்டுகளும் விரைவாக கவனித்து களையப்பட வேண்டும் என்றார்.

இந்த சம்பவங்களையும் நடைமுறைகளையும் ஊக்குவிக்கும் கட்டமைப்புகளும், நிறுவனமயப்பட்ட கலாச்சாரமும் அகற்றப்பட வேண்டும் என்று ஹூசேன் கூறினார்.

அரசு போர்க் காலத்திறகு பிந்தைய நீதியை மக்களுக்கு வழங்கவும், அரசியில் சட்ட சீர்திருத்தத்தை மேற்கொள்ளவும் பாதுகாப்பு துறை சீர்த்திருத்தங்களை செயல்படுத்தவும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் எந்வொரு அரசின் திறனையும் சோதிக்கும் என்று கூறிய ஹூசேன் இந்த விஷயத்தில் வெளிவரும் பொறுமையின்மை, கவலைகள் போன்றவற்றை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று கூறினார்.