இலங்கை: ராக்கிங் குற்றச்சாட்டில் 331 மாணவர்களுக்கு தடை

இலங்கையில் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் ராக்கிங் குற்றச்சாட்டின் பேரில் 331 மாணவர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் நடமாட காலவரையற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.

Image caption ராக்கிங் குற்றச்சாட்டில் ஒரே நேரத்தில் 331 மாணவருக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நடமாட தடை

பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் இரண்டாம் ஆண்டு ஆண்டு கல்வி பயிலும் அனைத்து மாணவர்கள் மீதும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை காரணமாக அம்மாணவர்கள் பல்கலைக்கழக விடுதிகளிலிருந்தும் தற்போது வெளியேறியுள்ளனர்.

புதிதாக அனுமதி பெற்றுள்ள முதலாம் ஆண்டு மாணவர்கள் குறிப்பிட்ட காலத்தின் பின்னர் ராக்கிங் செய்யப்பட மாட்டார்கள் என பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு வழங்கிய உத்தரவாதத்தை மீறி இம்மாணவர்கள் நடந்து கொண்டதாக பல்கலைக்கழகத்தின் துனைவேந்தரான பேராசிரியர் எம்.எம். எம். நாஜீம் பிபிசி தமிழோசைக்கு தெரிவித்தார்.

தொடர்ந்தும் ராக்கிங்கில் இம் மாணவர்கள் ஈடுபட்டு வந்தமை தொடர்பாக விரிவுரையாளர்கள், பெற்றோர்கள் உட்பட பல்வேறு தரப்பினராலும் தமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் 2-ம் ஆண்டு மாணவர்களுக்கான விரிவுரை தவிர்த்த அனைத்து விரிவுரைகளும் வழமை போல் நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.

இந்த தடை நீக்கம் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அடுத்த சில தினங்களில் ஓழுக்காற்றுக்குழு உட்பட பல்கலைக்கழக நிர்வாகம் கூடி தீர்மானிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.