இலங்கை கதிர்காமம் முருகன் ஆலயத்திற்கு சென்ற பக்தர்கள் மீது காட்டு யானை தாக்கு

  • 1 ஜூலை 2016
Image caption கதிர்காம கந்தனின் அருளை பெற கால் நடையாக செல்லும் யாத்திரிகர்கள்

இலங்கையின் கிழக்கே கதிர்காமம் முருகன் ஆலயத்திற்கு தல யாத்திரை மேற்கொண்ட ஐந்து பக்தர்கள் காட்டு யானையால் தாக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை அதிகாலை யால சரணாலய பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

உகந்தை முருகன் ஆலயத்திலிருந்து யால சரணாலயம் வழியாக கதிர்காமத்திற்கு கால்நடையாக சென்ற பக்தர்கள் மீதே இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

வண்ணாத்தி கிணற்றடி என்ற இடத்தில் யாத்திரிகர்கள் உறக்கத்திலிருந்த போது இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது.

காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிய ராணுவம்

யாத்ரிகர்களின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியில் முகாமிட்டுள்ள இராணுவம் விரைந்து காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்திர உற்சவம் எதிர்வரும் 4ம் தேதி தீர்த்த நீராடலுடன் நிறைவு பெறுகின்றது.

நாட்டின் பல பாகங்களிலிருந்து ஆலய வருடாந்திர உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக அடியார்கள் கால்நடையாக செல்வது வழக்கமாகும்.

கால்நடையாக செல்லும் பக்தர்களுக்காக யால சரணாலய வனப் பகுதி குறிப்பிட்ட நாட்களுக்கு திறந்து விடப்படும்.

இதன்படி, கடந்த 27ம் தேதி முதல் யால சரணாலய வனப் பகுதி திறந்து விடப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.