இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக இந்திரஜித் குமாரசுவாமி நியமனம்

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக தமிழரான பொருளாதார நிபுணர் டாக்டர் இந்திரஜித் குமாரசுவாமி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Image caption இந்திரஜித் குமாரசாமி

புதிய ஆளுநராக நியமனம் பெற்றுள்ள இந்திரஜித் குமாரசுவாமி இன்று சனிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்து உரையாடினார்.

இவர் எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவிருக்கின்றார்.

இந் நியமனத்தையடுத்து மத்திய வங்கி ஆளுநர் தொடர்பாக இலங்கை அரசியலில் நீடித்து வந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.

ஏற்'கனவே மத்திய வங்கி ஆளுநராக பதவி வகித்த அர்ஜுன் மகேந்திரனின் பதவிக் காலம் கடந்த 30ம் திகதியுடன் முடிவடைந்ததையடுத்தே இப்புதிய நியமனம் இடம் பெற்றுள்ளது.

பொது நல வாய செயலகத்தின் முன்னாள் பொருளாதார விவகாரங்களுக்கான இயக்குநரான டாக்டர் இந்திரஜித் குமாரசுவாமி லண்டன் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை மேற்கொண்டிருந்தார்.

இவர் ஏற்கனவே இலங்கை மத்திய வங்கியிலும் நிதி அமைச்சிலும் பல்வேறு உயர் பதவிகளை வகித்திருக்கின்றார் .

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் மத்திய வங்கி ஆளுநர் பதவி வகித்த அர்ஜுன் மகேந்திரன் சிங்கைப்புர் பிரஜை ஆவார். இதன் காரணமாக இந் நியமனத்திற்கு எதிர்கட்சிகள் தமது எதிர்ப்பை தொடர்ந்தும் வெளியிட்டு வந்த அதே வேளை பதவி நீடிப்பு வழங்கக் கூடாது என்றும் வலியுறுத்தி வந்தன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.