ஜார்ஜ் மாஸ்டரை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவு

விடுதலை புலிகள் அமைப்பின் மொழி பெயர்ப்பாளர் என்று கூறப்படும் ஜார்ஜ் மாஸ்டரை விடுதலை செய்யுமாறு கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2009-ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், ஜார்ஜ் மாஸ்டர் இலங்கை பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் சில மாதங்கள் குற்ற புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டு அவர் விசாரிக்கப்பட்டார்.

பின்னர், சட்ட மா அதிபரின் இணக்கத்திற்கு அமைய ஜோர்ஜ் மாஸ்டருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது.

இது தொடர்பான வழக்கு இன்று அழைக்கப்பட்ட போது கருத்துக்களை தெரிவித்த போலீசார், சந்தேக நபரான ஜார்ஜ் மாஸ்டருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய போதிய ஆதாரங்கள் இல்லை என்று அறிவித்தனர்.

எனவே, அவரை விடுதலை செய்யுமாறு சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக போலீசார் அறிவித்தனர்.

அதன் பின்னர் ஜார்ஜ் மாஸ்டரை விடுதலை செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.