இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு: ஆராய பிரதமர் தலைமையில் விசேட குழு

  • 6 ஜூலை 2016

அத்தியாவசிய பொருட்களின் விலை அடிப்படையற்ற முறையில் அதிகரிக்கப்படுவது குறித்து ஆராய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Gayantha Karunatilleka
Image caption அமைச்சர் கயந்த கருணாதிலக்க

இன்று கொழும்பில், அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்க இதனை அறிவித்தார்.

தற்போது சந்தையில் மக்கள் பொதுவாக வாங்கும் அத்தியாவசிய பொருட்களின் விலை அசாதாரணமான முறையில் அதிகரித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இவ்வாறு அடிப்படையற்ற முறையில் விலை அதிகரிப்பது குறித்து ஆராய்ந்து, நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பிரதமரின் தலைமையில் விசேட அமைச்சர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த குழு அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைகளை முன்வைக்கவுள்ளது.

இதேவேளை, அதிக விலைக்கு அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளை சட்டத்திற்கு முன் கொண்டுவர நாடளாவிய ரீதியில் விசேட தேடுதல்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கூறிய அமைச்சர் கயந்த கருனாத்திலக்க, விலை அதிகரிக்கப்பட்டுள்ள சில அத்தியாவசிய பொருட்களுக்கு மக்களின் நன்மை கருதி மானியமொன்றை வழங்குவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் கருனாத்திலக்க மேலும் தெரிவித்தார்.