யாழ்ப்பாணம் செவிலியர் வேலை நிறுத்தத்திற்கு நீதிமன்றம் தடை

  • 8 ஜூலை 2016

இலங்கை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், செவிலியர் மேற்கொள்ளவிருந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

செவிலியர் ஒருவரை வைத்தியசாலையின் ஒரு பிரிவில் இருந்து மற்றுமொரு பிரிவுக்கு நிர்வாகம் இடம் மாற்றம் செய்ததை எதிர்த்தும், அந்த உத்தரவை விலக்கிக் கொள்ள கோரியும் யாழ் வைத்தியசாலையை சேர்ந்த அரச செவிலியர் சங்கக் கிளையினர் வெள்ளிக்கிழமை காலை வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர்.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக வைத்தியசாலையின் பல பிரிவுகளிலும் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளிகளும், அவர்களுக்கான சத்திர சிகிச்சை உள்ளிட்ட அவசர சிகிச்சை சேவையும், சிகிச்சைக்காக வருகின்ற நோயாளர்களும் உயிராபத்தை எதிர்நோக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து வேலை நிறுத்தத்திற்குத் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

யாழ் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் பொறுப்பதிகாரி டாக்டர் சிவநாதன் ஜமுனானந்தாவின் சார்பில் சட்டத்தரணி விஸ்வலிங்கம் திருக்குமரன் இந்த மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரணை செய்த நீதிபதி இளஞ்செழியன் அவர்கள் ஐசிசிபிஆர் எனப்படும் சர்வதேச சிவில் அரசியல் மாநாட்டு மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் உயிர்வாழும் உரிமையை உறுதிப்படுத்தும் வகையில், மேல் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள தடை உத்தரவு அதிகாரத்தைப் பயன்படுத்தி செவிலியர் சங்கத்தினரின் வேலை நிறுத்தப் போராட்டத்தை தடை செய்து உத்தரவிட்டுள்ளார்.

இத்தகைய நீதிமன்ற உத்தரவு ஒன்றின் மூலம் வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றுக்குத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் தடவை என சட்டத்தரணி திருக்குமரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, எதிர் தரப்பினர் தமது பக்க நியாயங்களை எடுத்து கூறுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்காக வழக்கை வரும் 21 ஆம் தேதி வரை நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.