மட்டக்களப்பு விமான நிலையம்: சிறிசேன திறப்பு

இலங்கையில் போருக்குப் பின்னர் புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு விமான நிலையத்தை இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்தார்.

290 மில்லியன் ரூபாய் நிதியில் சிவில் விமான சேவைகள் அமைச்சகத்தினால் விமான நிலையமும் விமான ஓடு பாதையும் புனரமைக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து விமானம் மூலம் மட்டக்களப்பை சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் மட்டக்களப்பு விமான நிலையத்திலிருந்து தினமும் கொழும்புக்கும் திருகோணமலைக்குமிடையில் இரு சேவைகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது.

1958-ஆம் ஆண்டு மட்டக்களப்பு விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. 1975 வரையில் உள் நாட்டு விமான சேவைகள் நடைபெற்ற போதிலும் பின்னர் நஷ்டம் காரணமாக விமான நிலையம் மூடப்பட்டு சிவில் விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன.

1983-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27-ஆம் தேதியன்று ஶ்ரீலங்கா விமானப் படையின் கீழ் கொண்டு வரப்பட்டது. விமான படையினரால், மேலும் 500 மீட்டர் விஸ்தரிக்கப்பட்டது.

விமான படையின் கீழ் விமான நிலையம் இருந்தாலும், பயணிகளின் வசதிக்காக விமானப்படை மற்றும் தனியார் விமான சேவைகள் அவ்வப்போது நடைபெற்று வந்தன. வாடகை விமானங்கள் தரை இறங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தன.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவினால், இம் மாத முற்பகுதியில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி விமான நிலையம் சிவில் விமான போக்குவரத்து வாரியத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

விமான நிலையம் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு பணிகளில் விமான படையினர் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வேளையில், 201 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்தார் .