விளக்க மறியலில் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ

  • 11 ஜூலை 2016

கருப்பு பண குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 18 ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ நிதி நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான பணத்தை முறைகேடாக செலவு செய்தது தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக நிதி மோசடி குற்றத்தடுப்பு பிரிவுக்கு அழைக்கப்பட்ட நிலையில், விசாரணையின் முடிவில் கைது செய்யப்பட்டார்.

படத்தின் காப்புரிமை Namal Rajapaksa

கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலிசார் நாமல் ராஜபக்ஷ கிரீஸ் எனும் நிறுவனமொன்றில் இருந்து சுமார் 70 மில்லியன் ரூபாவை பெற்றுக்கொண்டு அதனை மோசடி செய்துள்ளதாக தெரிவித்தனர்.

சம்பந்தப்பட்ட விசாரணைகள் பூர்த்தி செய்யப்படதாமை காரணமாக சந்தேக நபரை விளக்க மறியலில் வைக்குமாறு போலிஸ் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தனர்.

அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீதிபதி சந்தேக நபரான நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக நாமல் ராஜபக்ஷ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரேமநாத் தொலவத்த தெரிவித்தார்.

நாமல் ராஜபக்ஷவை கைது செய்வதற்கு போலிசாரிடம் போதிய ஆதாரங்கள் இருக்கவில்லை என்று கூறிய வழக்கறிஞர் தொலவத்த இந்த கைது முழுமையாக அரசியல் பழிவாங்கல் என்று குற்றம்சாட்டினார்.

எற்கனவே, இது குறித்து அடுத்த வழக்கு தினத்தில் நீதிமன்றம் முன் கருத்துக்களை கூறி பிணை மனுவொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக வழக்கறிஞர் பிரேமநாத் தொலவத்த மேலும் தேரிவித்தார்.

இதனிடையே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளருமான கோத்தபய ராஜபக்ஷவும் இன்றைய தினம் நிதி மோசடி குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தபட்டது குறிப்பிடத்தக்கதாகும்.