வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக்குளத்தில் அமைக்க கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு

வவுனியா மாவட்டத்தில் 200 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை புறநகர்ப்பகுதியாகிய தாண்டிக்குளத்திலா அல்லது நகருக்கு வெளியே ஓமந்தையிலா அமைப்பது என்பதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள இழுபறி இறுதி முடிவின்றி தொடர்கின்ற நிலையில், வவுனியா விவசாய கல்லூரி மாணவர்கள் தமது கல்லூரிக்கு எதிரில் தாண்டிக்குளத்தில், இந்த நிலையம் அமையக்கூடாது எனக் கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Image caption ஆர்ப்பாட்டம் நடத்திய வவுனியா விவசாய கல்லூரி மாணவர்கள்

வரவு செலவுத் திட்டத்தின் கீழ் அரசினால் வழங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை, வவுனியா நகரில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் தாண்டிக்குளத்தில் அமைக்க வேண்டும் என அரசு நிபந்தனை விதித்துள்ளது.

தாண்டிக்குளம் விவசாய கல்லூரிக்கு எதிரில் உள்ள விவசாய விதை உற்பத்தி பண்ணைக்குரிய காணியில், இந்த பொருளதார மத்திய நிலையத்தை அமைப்பது குறித்த ஆலோசனையும் வெளியிடப்பட்டிருந்தது.

எனினும், அதனை அங்கு அமைக்க முடியாது என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒரு சாராரும், நகருக்கு வெளியில் ஒமந்தையிலேயே அதனை அமைக்க வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் உள்பட மற்றொரு சாராரும் வாதிட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக, எதிரும் புதிருமான ஆர்ப்பாட்டங்கள் வவுனியாவில் நடைபெற்றுள்ளன.

இதனால், பொருளாதார மததிய நிலையத்தை அமைக்கும் விடயத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல்வாதிகள் இணக்கம் காண முடியாத நிலையில், இரு கூராகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இரண்டு இடங்களையும் நேரில் சென்று பார்வையிட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, இது தொடர்பாக வடமாகாண முதலமைச்சரை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

ஓமந்தையில் இந்த பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்கான காணி ஒதுக்கீட்டில் பிரச்சினைகள் இல்லை எனவே, அந்த அடிப்படையில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

ஆயினும், ஓமந்தை காணியை எடுப்பதில் சிக்கல்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள மாவை சேனாதிராஜா, 200 மில்லியன் ரூபா நிதியும் உடனடியாக பயன்படுத்தப்படாவிட்டால், திரும்பிச் செல்லும் ஆபத்தைத் தவிர்ப்பதற்காக தாண்டிக்குளத்தில் அதனை அமைக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் கூறியிருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஒரு இழுபறி நிலையில், தாண்டிக்குளத்தில் அமைந்துள்ள வடமாகாணத்திற்கான ஒரேயொரு விவசாய கல்லூரியின் மாணவர்கள், பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக்குளத்தில் அமைக்கக் கூடாது எனக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

இந்த நிலையத்தை தாண்டிக்குளத்தில் அமைத்தால், தமது கல்லூரியின் கற்றல் மற்றும் செய்முறை பயிற்சி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படும் என்றும், விவசாய விதை உற்பத்தி பண்ணையின் செயற்பாடுகளும் பாதிக்கும் எனவும் அவர்கள் தமது எதிர்ப்புக்குக்கான காரணமாக கூறியுள்ளனர்.