இழுவை மீன்பிடி, இந்திய மீன்பிடிக்கு எதிராக யாழ் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

வட பகுதி கடற்பரப்பில் இந்திய மீனவர்களினதும், உள்ளுர் மீனவர்களினதும் இழுவைப் படகு மீன்பிடி தொழிலைத் தடைசெய்யக் கோரியும், வாரத்தில் இரண்டு தினங்கள் அல்லது வருடத்தில் 75 நாட்கள் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற இந்திய மத்திய அரசின் கோரிக்கையை இலங்கை அரசு ஏற்கக் கூடாது எனக் கோரியும் வடமாகாண மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

வடமாகாண மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் இதற்கான அழைப்பை விடுத்திருந்தது.

யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக்கு எதிரில் கூடிய வடமாகாண மீனவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்திய மீனவர்களின் வருகையை முழுமையாகத் தடுத்து நிறுத்துவதற்குரிய தீரமானம் ஒன்றை நிறைவேற்றி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வடமாகாண சபை முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது முன்வைக்கப்பட்டுள்ளது.

மீனவர்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன் வடமாகாண ஆளுனர் சிறிசேன குரே, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோருக்கும் கையளிக்கப்பட்டுள்ளது.